போகி நெருப்பே

இந்த "போகி நெருப்பே பொசுக்கு" என்பது கவிப்பேரரசின் "இன்னொரு தேசிய கீதம்" என்னும் புத்தகத்தில் இருந்து...

வந்தனம் போகியே! மார்கழி மாதமும்
சிந்தை இனிக்க உறங்கிடச் - சுந்தரமாய்ப்
பூத்திருக்கும் நெல்மணியின் பூப்பறிக்கும் நல்லுழவர்
காத்திருத்து தன்னில்லைச் சுத்தமெனும் - சூத்திரத்தில்
தூய்மைப் படுத்திடவே மண்ணில் பிறந்தவளே!
வாய்ச்சிரிக்கும் பேரிளம் பெண்ணவளே! - தாய்போல்நீ!
தைத்திங்கள் என்னும் ஒருபிறப்பை ஈன்றெடுப்பாய்
கைத்திறமாய் ஒற்றை நெருப்பினையும் - வைத்துள்ளாய்!
அந்த நெருப்பினை!யான் கொஞ்சம் கடன்கேட்டேன்
சிந்தாய் அதையென் கரத்தினிலே - இந்தஜகம்
நன்மை அடைந்திடவே வெந்தழல் கேட்டேனே
என்முன் நிறுத்து அதுதனையும் - இன்றுலகில்
நூதன மென்ற பெயர்சொல்லி நம்தமிழும்
சேதம் அடைந்திடச் செய்யுகின்ற - பாதகர்கள்
ஆங்கிலம் தன்னைத் தமிழுடன் சேர்த்தேதான்
தீங்கினைச் செய்து கிடக்கின்றார் - ஒங்கி!அன்று
அச்சங்கள் ஏதுமின்றி என்முன்னோர் ஆக்கிவைத்த
பச்சிளம் ஓலைகளை நீயெரித்தாய் - அச்சுவெல்லம்
என்றே இனித்திடும் சங்கக் கவிதைகளைத்
தின்றாய்! கொடுந்தீப் பேர்கொண்டாய் - இன்றுயான்
அப்பேர் அகற்றிவிட நன்னெறி சொல்கிறேன் !
தப்பாக ஆங்கிலம் சேர்கவியை - ஒப்பற்ற
யோகியர் உள்ளத்தே தோன்றும் கனலொத்த
போகி நெருப்பே பொசுக்கு!


-விவேக்பாரதி 
18.01.2015

Comments

Popular Posts