நானும் ராதையும்

அந்த நிலவுக்குப் பெயரோ ராதா!
   எங்கள் உறவுக்குப் பெயரோ காதல்!
இந்த மலருக்குப் பெயரும் ராதா!
   எங்கள் பிரிவுக்குப் பெயரும் காதல்!

நாணத்தின் திலகம் நடிப்பதில் சிகரம்
   நல்லவள் பெயரோ ராதா!
ஆணுக்குள் அழகாம் என்றனைச் சொல்லும்
   அன்புக்குப் பெயரோ காதல்!

ஆங்கிலம் பேசும் அருந்தமிழ் வீசும்
   ஆற்றலைக் கொண்டவள் ராதா!
வாங்கிய தெல்லாம் பகிர்ந்து கொடுக்கும்
   வழக்கத்தின் பெயரோ காதல்!

குழலிசை கேட்டுக் குரலொலி காட்டிக்
   குழப்பிடுவாள் அவள் ராதா!
மழலையின் மொழியில் மயங்கிசைப் பாடல்
   மலர்வதன் பெயரோ காதல்!

காதலே ராதா ராதையே காதல்
   கவிதையிலே எம் உறவு!
நாதமும் சொல்லும் நல்லிசைப் பாட்டும்
   நாளுக்கு நாளதில் வரவு!

ஆமாம்!
அந்த நிலவுக்குப் பெயரோ ராதா
எங்கள் உறவுக்குப் பெயரோ காதல்!!

-விவேக்பாரதி
09.08.2017

Comments

Popular Posts