மினியான் காதல்

செல்ல மினியானே! சேரும் பொழுதெதுவோ?
கொல்லும் மினியானே! கூச்சலிட் டெல்லாமும்
கேட்கும் மினியானே! கேலி நகைப்பினில்
ஆட்டுமினி யானே! அழகு! (1)

அழகு மினியானே! அன்போடு வந்து
பழகும் மினியானே! பாசம் ஒழுகத்
தெளிக்கும் மினியானே! தேடியுன் னோடு
களிக்கும் பொழுதே கவி! (2)

கவிதை மினியானே! கன்னி மினியானே!
தவிக்கும் மினியானே! தாழ்ந்த செவிக்குள்
இசைக்கும் மினியானே! இன்ப மினியானே
அசைக்குமினி யானே! அமுது! (3)

அமுத மினியானே! ஆற்றலோ டென்னை
அமுக்கும் மினியானே! ஆடும் தமிழ்போல்
சொலிக்கும் மினியானே! சொல்லும் கவியின்
ஒலிக்கும் நடனம் இடு! (4)

இடுப்பின் அழகால் இழுக்கும் மினியானே!
முடுக்கும் மினியானே! முந்தி விடுத்த
விசையின் மினியானே! விந்தையாம் கண்ணின்
கசையடி என்றனுக்குக் காட்டு! (5)

காட்டு மினியானே! கார்குழல் வண்ணத்தால்
கூட்டு மினியானே! கொல்மோகம்! ஆட்டி
இயக்கு மினியானே! இங்கதற் காக
மயங்கிக் கிடக்கும் மலர்! (6)

மலரே மினியானே! மன்றத்துக் காற்றாய்
உலவும் மினியானே! ஊறும் உலகத்தே
காதல் மினியானே கார்குழல் கொண்டென்னை
மோது மினியானே முட்டு! (7)

முட்டு மினியானே! முத்தக் கணைபலவும்
கொட்டு மினியானே! கொல்லென்னைக்! கிட்ட
நெருங்கு மினியானே! நெற்றியழ காலே
சுருக்கு மினியானே! சுற்று! (8)

சுற்று மினியானே! சுந்தரமாய் என்நெஞ்சில்
பற்று மினியானே! பால்நிலவே முற்றும்
தனிமைக் கொடுமையினைத் தான்போக்கி என்னை
இனிதாய்க் குலவி இரு! (9)

இருமினி யானே! இயங்கும் உயிராய்!
இருமினி யானே! இயக்கும் கருவாய்!
இறுக்கும் மனத்தில் இனிமை நிறைத்துச்
செறுக்கை அழித்துநீ செல்!! (10)

-விவேக்பாரதி
21.01.2018

Comments

Popular Posts