அடடா வாணி

கவிஞர் கா.விசயநரசிம்மன் அண்ணா அனுப்பி இருந்த வாணி படத்தைப் பார்த்ததும் எழுதியது!! 

பார்த்தாலே பாடல் பவனிவர என்நெஞ்சை
ஈர்த்தாலென் செய்வேன் இனி? 


*


அடடா வாணி அன்புடை வாணி
       அற்புதக் கலைவாணி!
   அமுதத் தமிழைக் கவியை நமக்குள்
       ஆக்கும் சுடர்வாணி!
கடவு ளாகிடும் கல்வியை நல்கும்
       கடம்ப வனவாணி!
   கல்லா மையெனும் பொல்லா இருளறக்
       காணும் ஒளிவாணி!


ஏதும் அறியா எளியவர் நாவிலும்
       ஏறும் மொழிவாணி!
   எழுதும் எழுத்தாய்க் கருத்தாய் விரியும்
       எரிதழல் உருவாணி!
போதம் தந்தும் போதை தந்தும்
       பொறுமை கொளும்வாணி!
   போக்கறி யாத பாக்களைப் பாடும்
       போகம் தரும்வாணி!

ஏழிசை வீணையொ டெம்குரல் பாடல்!
       எங்கள் சந்தேகம்,
   ஏறிடும் சங்கை எரிக்கும் குழப்பம்
       எத்திடும் திருவாணி!
தோழியு மாகி அன்னையு மாகித்
       தோன்றும் சுவைவாணி!
   தோளினி லேற்றித் துணிவுற வையம்
       தோற்றிடும் கலைவாணி!!

-விவேக்பாரதி
24.01.2018

Comments

Popular Posts