என்ன ஆவேன்?


~கவிஞர் ராஜேஷ் பச்சையப்பன் கவிதை ஒன்றின் பரவசத்தில் எழுதியது~

தூக்கத்தில் நீயுளறும் தூமொழிகள் ஆவேனோ?
நாக்கடியில் வைக்கும் நனிகற்கண் டாவேனோ?
பூக்கடையே உன்னின்பப் பூவாசம் மாந்துகின்ற
ஈக்களென ஆவேனோ ஈங்கு?


அவ்வப்போ துன்கழுத்தில் ஆடுமுடி யாவேனோ?
தவ்வுகின்ற நின்காலில் தங்கமென ஆவேனோ?
கவ்வித்தான் நீவீசும் காலிப்பை ஓரமெனச்

செவ்வியதாய் ஆவேனோ? செப்பு!


சீவுகையில் நீசிந்தும் சின்னமயிர் ஆவேனோ?
கூவலெனும் நின்குரலில் குட்டியிசை ஆவேனோ?
நாவிலெனை நீசுவைக்க நல்லபழ மாவேனோ?

ஆவலுடன் கேட்கின்றேன் ஆம்!


நீசிந்தும் ராகத்தில் நின்று மயங்குவனோ?
நாசித் துவாரத்தின் நர்த்தனத்தில் வீழேனோ? 
வாசிக்க நீயெடுக்கும் வார்த்தைக்குள் சிக்குண்டு 
பூசித்து ஆளேனோ புவி!

காதற் கிளியழகின் காப்பாக மாறேனோ?
காதிற் குழையாகிக் காணங்கள் கேளேனோ?
நீதரும் முத்தத்தின் நீட்சி பெறவேங்கிப் 
பாதந்து நிற்கின்றேன் பார்!!

-விவேக்பாரதி 
04.01.2018 

 

Comments

Popular Posts