உழவே உயிர்


உழவுக்கு உயிரூட்ட வேண்டும் - அதன் 
   உரிமைக்கு வழிகாட்ட வேண்டும்! 
எழிலுக்கு எழில்சேர்க்க வேண்டும் - அதற்கு 
   எல்லோரும் கைசேர்க்க வேண்டும்! 

உழுவோரைத் தெய்வமெனச் சொல்லி - அவர் 
   உயர்வுக்கு வழிபோட வேண்டும்! 
அழகான வயல்வரப்பு பூமி - வர 
   அறிவான செயல்செய்ய வேண்டும்! 

மாட்டுக்கு வேலைதர வேண்டும் - வயல் 
   மண்ணுக்கு நன்மைதர வேண்டும்! 
வீட்டுக்கு விளைப்பதனை வைத்து - மீதி 
   வீதியில் விற்கவர வேண்டும்! 

நீர்விழ வழிசெய்ய வேண்டும் - அதை 
   நித்தமும் புதுப்பித்தல் வேண்டும் 
ஏர்போட்டு மண்ணையுழ வேண்டும் - அதில் 
   ஏற்றபயிர் விளைபோட வேண்டும்! 

உழவின்றி உயிரில்லை தம்பி - இந்த 
   உலகில்லை உயர்வில்லை தம்பி 
எழவேண்டும் வயல்காக்க வேண்டும் - முடிவு 
   எடுத்துவா பயன்வந்து சேரும்!! 

 -விவேக்பாரதி 
05.01.2018

Comments

Popular Posts