அம்மாவின் ஆப்பம்

ஆப்பமுன்னா அப்பமுங்க
ஆளத்தின்னும் ஆப்பமுங்க
ஆத்தா சுட்டு வெச்ச
அழகான ஆப்பமுங்க!


தின்னத் தின்ன பசி எடுக்கும்
தெவிட்டாம வாய் சுரக்கும்!
மெல்லவே தேவ இல்ல
மெதுமெதுன்னு உள்ளிறங்கும்!

வானத்துல வட்ட நெலா
நெறம்போல மாவெடுக்க,
தோசக்கல்லு ஊத்தையில
நிலா ஆகும் சூரியனா!

அதுக்குள்ள நட்சத்தரம்
அது மொதக்கும் பால்வீதி!
அரச்சுவெச்ச தேங்காப் பாலு
அப்படியே நா மணக்கும்!

ஆப்பத்துக்கு அடிச்சிக்கிட்டே
அலக்ஸாண்டர் போர் முடிச்சான்!
ஆப்பங்களத் தேடித் தானே
ஆயிரம் பேர் தவங்கிடந்தான்!

அம்மா சுட்ட ஆப்பத்துக்கு
அசறாத ஆளும் இல்ல
அம்மம்மா அந்தச் சுவ
அடிநாக்கு வங்கியில!

சின்னப் புள்ள கேட்டுப்புட்டா
செவசெவன்னு ரெண்டு சுட்டு
அப்படியே தந்திடுவா
அடுத்த ஆப்பம் ஊத்திடுவா!

பெரியபுள்ள கேட்டுப்புட்டா
பெரிசாக மூணு சுட்டு
பெத்தவ கொடுத்துடுவா!
பெருமையா அவ சிரிப்பா!

ஆப்ப சுவ நெஞ்சுக்குள்ள
ஆனந்தம் கூட்டுதம்மா!
ஏப்பம் வுடும் பசிவயிறு
எட்டித்தான் பாக்குதம்மா!

தூரத்துல நானிருக்கேன்
தூங்காம தவிச்சிருக்கேன்
ஆப்பஞ் சுட்டு ஊட்டி விட்டு
அப்படியே தூங்கப் பண்ணு!!

அம்மா!
ஆப்பஞ் சுட்டு ஊட்டி விட்டு
அப்படியே தூங்கப் பண்ணு!

-விவேக்பாரதி
10.02.2018

Comments

  1. ஆப்பப் பாடலிலே அசந்து நான் நிக்கறேன்
    நேசப் போர்வையாக நெசவு செஞ்ச பாடலிது
    திருச்சி போகையிலே எனக்கும் தெரியாமப் போச்சேன்னு
    திகைச்சு நானும் பாக்குறேன் தின்னத்தான் ஏங்குறேன்

    ReplyDelete

Post a Comment

Popular Posts