இரவுச் சத்தம்

இரவின் நிசப்தம் இதயச் சொர்க்கம்
    இசைய மைத்ததும் யார்?
சுரமாய்ச் சுகமாய் சுவையாய் இரவைச்
    சுடச்ச மைத்ததும் யார்?


கனவில் ஆயிரம் வண்ணம் இழைத்துக்
    காட்சிப் படுத்துவதார்?
நனவில் காணும் புவியினில் கோடி
    நிறங்கள் சொறிந்ததுமார்?

சீறிப் பாய்ந்திடும் காற்றுடன் என்னையும்
    சேர்ந்தே அசைப்பதுமார்?
கூறும் சொற்களுக் குள்ளே உயிரைக்
    கூட்டி நடத்துவதார்?

நிலவெழி லோடெழும் நிசப்தம் கலைய
    நிறைய உரைப்பதுமார்?
கோலங்கள் கோடி படைத்தெனைப் பாடிடக்
    கொண்டு கொடுப்பதுமார்?

யாரவர் யாரென நெஞ்சிடைக் கேள்விகள்
    யாமம் கழிகிறது!
நாரெனக் கிழிந்து பறக்கும் மனத்தினில்
    ஞானம் பிறக்கிறது!!

-விவேக்பாரதி
24.02.2018

Comments

Popular Posts