ஆவித்தீ

சிந்தைத் திடலில் வேள்வித்தீ
    சிரிக்கும் அந்த வேள்வித்தீ
தந்தை ஈசன் உருகாண
    தானாய் வளரும் வேள்வித்தீ!
முந்தை வினைகள் துன்பங்கள்
    மூளும் ஐயம் சுள்ளிகளாய்
விந்தை மிகுந்த வேள்வித்தீ
    வீசும் காற்றில் வேள்வித்தீ!


உருகும் எண்ணம் நெய்யாக
    ஊற்றி வளர்க்கும் வேள்வித்தீ!
கருமைக் கண்டன் கழல்காணக்
    கருத்து சமைக்கும் வேள்வித்தீ!
விரைவாய்த் தகதக தகவென்றே
    விண்ணைப் பற்றும் வேள்வித்தீ!
பெரிதாய் நெஞ்சின் மத்தியிலே
    பேணி வளர்க்கும் வேள்வித்தீ!

அழுகை கூட மந்திரங்கள்!
    ஆக்கும் கவிதை ஆகுதிகள்!
தொழுகை ஒன்றே குறிக்கோளாய்த்
    தோன்றிய தெல்லாம் ஆககமாய்!
முழுதாய் வளர்ந்து சடைதிறந்து
    மூர்க்கப் பதங்கள் மேலோங்க
எழுவது எழுவது வேள்வித்தீ!
    என்மனக் கூட்டின் வேள்வித்தீ!

சங்கரன் பேரில் வேள்வித்தீ!
    சாதிக் கின்ற வேள்வித்தீ!
சங்கடம் போக்கும் வேள்வித்தீ!
    சகலனை வேண்டும் வேள்வித்தீ!
பொங்கும் புனலாய் வேள்வித்தீ!
    புதுமை உருவாய் வேள்வித்தீ!
எங்கும் பரவும் காற்றைப்போல்
    ஏகாந் தத்தின் வேள்வித்தீ!

சிவனே வருவாய் எனச்சொல்லி
    சிந்தை ஏற்றும் வேள்விதனில்
நவமாய் ஜ்வாலைக் கடலெழும்பும்!
    நாளும் வேள்வி நலம்விளங்கும்!
சிவனே நேரில் வரும்வரையில்
    சிறிதும் நிற்கா திதுவளரும்!
அவனே நிறுத்தச் சொல்லும்வரை
    ஆவியி னுள்ளில் தீவளரும்!!

-விவேக்பாரதி
14.02.2018

Comments

Popular Posts