கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடுகிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில்
   கிடக்கும் பிணங்கள் உயிர்த்தெழுந்து
கருத்துக் கரங்கம் அமைத்திடவே
   காற்றில் மணலும் பறக்கிறது!
சிரித்துக் கொண்டு பேய்க்கூட்டம்
   சிறப்பாய் அரங்கம் செய்கிறது
வருத்தப் பட்ட பிணமெல்லாம்
   வகையாய்ச் சுற்றி அமர்கின்றன!

தலைவ ருக்கோ உயர்மேடை
   தகுதி குறைவா கீழென்ற
உலக வேற்று மைகளெல்லாம்
   ஒன்றும் அறியா தத்தனையும்
கலக மற்ற வட்டத்திலே
   கனிவாய் அமர்ந்தே ஒவ்வொன்றாய்
பலத்த கருத்து வாதத்தில்
   பார்த்துப் பார்த்து ரைக்கின்றன!

"ஐயா கொடுமை கேட்டீரா?
   அங்கோர் நாட்டில் போரென்று
வெய்யக் கொடுமை புரிகின்றார்
   வெட்கங் கெட்ட மனிதரெலாம்!
செய்த கருமப் பயனாலே
   செத்தும் அலையும் பேயெமக்கே
ஐயம் அச்சம் எழுமளவு
   அங்கே கொலைகள் நடக்குதெனப்"

பேய்கள் சொல்லி முன்னிலழப்
   பெரிய பிணத்தின் கூட்டமெலாம்
"ஆய்வோம் அதனை அதற்கேதான்
   அமர்ந்தும் உள்ளோம் எனச்சொல்லி
தாய்பூ மிக்கே கோபம்வரும்
   தணியாத் தீமை செய்கின்றார்
மாய்வ தற்கோ மனிதயினம்
   மாதா சக்தி எனத்தொழுது

நாமும் இனிமேல் நாளெல்லாம்
   நம்மை மறைக்கத் தேவையிலை
பூமிக் குள்ளே புதையுண்டு
   புனிதப் பொறுமை பெற்றுவிட்டோம்
தீமைக் காரியம் அவரிழைத்துத்
   தீரியும் பிணமாய் வாழ்கின்றார்
காமம் ஆசை பொய்யாலே
   கருணை இழந்தார் மனிதரெலாம்!

போவோம் அவரைக் கைதாக்கிப்
   பொழுதுக் கடிமை யாயாக்கித்
தீவா ளிக்கோர் முடிவாக்கித்
   திரும்ப மலர்ச்சி ஆக்கிடுவோம்!
சாவா மனிதம் நம்மாலும்
   சாற்றப் படுமே எனநிறுவி
ஆவோம் இறையின் தூதுவராய்!
   அவரின் முன்னோர் நாமன்றோ!"

என்றே கூறி எழுந்தனவே
   எழுந்த கணத்தில் காளிவந்து
நின்றே அருளை நீட்டியவை
   நினைத்த யாவும் நடந்தேறத்
தன்றன் அருளைச் சாற்றியதும்
   தகவாய்ப் பிணங்கள் சக்தியுற
மின்னும் போர்வாள் வீரரென
   மிளிரும் உருவில் நின்றனவே!

ஐயா இதுவோர் கற்பனைதான்
   அச்சம் வேண்டா என்றாலும்
பொய்யால் போரால் பலகொடுமை
   புரியும் மனிதன் பிணமேதான்!
மெய்யாய் அடுத்த உயிரினையும்
   மேலாய் மதிக்க நினைத்துதவி
செய்யும் பிணமும் இறைமகனாம்
   சேர்வோம் தீர்ப்போம் போர்களையே!! 

-விவேக்பாரதி 
26.02.2018

Comments

Popular Posts