பறக்கவே

நேற்று கல்லூரி நண்பர்களுடன் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சென்றிருந்தோம். முதன்முதலாக அவ்வளவு பறவைகளைக் கண்டதும் மனம் பறக்க விரும்பிற்று!


கூடி வாழக் கூட்ட மாகிக்
    குடும்ப மான பறவைகாள்!
நாடி உம்மைக் காண வந்த
    நாங்கள் வேண்டும் வரமெலாம்,
பாடி ஆடி உம்மைப் போலப்
    பரந்தி ருக்கும் வானிலே
வாட லின்றி தேட லின்றி
    வலிமை யாய்ப்ப றக்கவே!


அன்பு பாஷை அழகில் ஓசை
    ஆக்கு கின்ற பறவைகாள்!
இன்று நாங்கள் உம்மைத் தேடி
    இங்கு வந்த காரணம்,
துன்ப மின்றி துவள லின்றி
    தோன்றும் இன்ப வானிலே
நன்று தீது செயல்ம றந்து
    நாங்க ளும்ப றக்கவே!

மரங்கள் தோறும் மகிழ்ச்சி யோடு
    மண்டி யுள்ள பறவைகாள்!
சரணம் வந்த இடம டைந்து
    சாற்றும் யாகம் ஒன்றுதான்
மரணம் இன்றி மனமும் இன்றி
    மத்தி யத்தி யானமே
அரணும் ஆக மகிழ்ச்சி யாகி
    அறிவி னால்ப றக்கவே!

வெள்ளை கருமை பச்சை நீலம்
    விதவி தத்தில் தங்கிடும்
வள்ளை கிள்ளை காக்கை கொக்கு
    வண்ண வண்ணப் பறவைகாள்!
உள்ள மெங்கும் சிறகு தோன்றி
    உயர வேண்டி உம்மிடம்
கொள்ளைப் பாடம் கற்க வந்து
    குழுமி னோம்ப றக்கவே!

ஆழ மற்ற நீள மற்ற
    அளவு மற்ற வானிலே
வாழு கின்ற வாழ்க்கை யன்றி
    வளமை ஒன்றை எண்ணிடோம்
சூழு கின்ற திசைகள் எங்கும்
    சுற்றி யுள்ள பறவைகாள்
ஏழை யான மனித வாழ்க்கை
    இனியும் தேவை இல்லையே!!

-விவேக்பாரதி
16.02.2018

Comments

Popular Posts