காளித் தேர்

"ஞானச்சக்கரம்" என்றொரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நேற்று கண்டு களித்தேன். அதில் கலைமகன் (Kalaimagan T) அவர்கள் பாடிய "யாதுமாகி நின்றாய் காளி" எனக்குள் இந்தக் காட்சியைக் காட்டியது...காளிமகா ராணியவள் தேர்வருகிறது! - அதில்
    கலைகளெனும் பாட்டுக்கூத்துச் சீர்வருகிறது!
தோளில்மலர் மாலைகொண்ட பார்வருகிறது - இந்தத்
    தோற்றத்துடன் என்னுயிரும் ஊர்வருகிறது!


சிங்கம்நூறு பூட்டியந்தத் தேர்வருகிறது - ஒரு
    தீச்சுடர்போல் வண்ணத்திலே தேர்வருகிறது!
எங்குமுற்ற மேகம்போலத் தேர்வருகிறது - அட
    எங்கள்காளி வீற்றிருக்கும் தேர்வருகிறது!

முன்னடுக்கில் தோன்றுகின்ற வில்லுப்பாட்டுகள் - அதில்
    முழங்குகின்ற பாடலெலாம் அன்னைபாட்டுகள்!
பின்னிருந்த ஆசனத்தில் அவளலங்காரம் - உலகப்
    பிறப்புகளும் இறப்புகளும் அவளதிகாரம்!

யாதுமாகி நின்றவளைப் பாடிப்பாடியே - அவள்
    யவ்வணத்தை அன்புளத்தைப் போற்றியாடியே,
காதம்கோடி தாண்டியந்தத் தேர்வருகிறது - பெருங்
    ககனவெளியில் தீப்பறக்கத் தேர்வருகிறது!

ஞானச்சக்க ரத்தினோசை சுருதியாகிட - இந்த
    ஞாலமிசை பக்திநெறி வழிகளாகிட
வானவில்லின் வண்ணயிழை சாலையாகிட - சுடர்
    வண்ணத்திலே நானியக்கும் தேர்வருகிறது!

அன்னைவரும் தேருக்கிந்தச் சிறுவன்சாரதி - உடன்
    அங்கமர்ந்து வருபவர்கள் லக்‌ஷ்மி,பாரதி!
மின்னலெனும் தேருண்டு தான்வருகிறது! - அதில்
    மின்னுகின்ற ஆதிசக்தி வான்வருகிறது!!

-விவேக்பாரதி
20.02.2018

Comments

Popular Posts