கோவை இனிப்பு

கோவைப் பனிக்காற்று - மனத்தைக்
   கொண்டு பறக்கிறது!
தாவும் நெஞ்சுக்குள்ளே - அதுபோய்
   தண்ணீர் நிறைக்கிறது!
சீவும் குளிர்மௌனம் - தலையில்
   சில்லென் றடிக்கிறது!
நாவில் அவள்நாமம் - எழுந்தே
   நாளைக் கொடுக்கிறது!

அன்பர் கூட்டங்களும் - அவர்
   அகத்தின் ஈட்டங்களும்
துன்பம் துறத்திடவே - வந்து
   தூய்மை நிறைக்கிறது!
இன்பம் கிடைக்குமிடம் - என
   இயம்பும் இக்கோவை
தெம்பைக் கொடுக்கிறது - ஒரு
   தெளிவு கிடைக்கிறது!

காலைப் பொழுதிலெல்லாம் - ஒரு
   கவிதை உதிப்பதில்லை
சாலை சாளரங்கள் - கவி
   சாற்றிக் கொடுப்பதில்லை
நீல வானத்திலே - அவள்
   நீவிய செந்நிறத்தின்
ஜ்வாலையைக் காண்கையிலே - மனம்
   ஜாதி மறக்கிறது!

பறவை ஆகிறது - மனம்
   பாடல் இசைக்கிறது
உறவை நாடியது - தனியாய்
   உயரம் காண்கிறது
நிறத்தின் ஓடையிலே - அதுபோய்
   நீந்திக் களிக்கிறது
மறந்த மனிதமனம் - உயரே
   மகிழ்ந்து சிரிக்கிறது!

கோவையின் காலைமணம் - கவிதை
   கொண்டு கொடுக்கிறது
கோவைப் பனிமூட்டம் - மனத்தைக்
   கோபுரம் ஆக்கியது
கோவைக் கலையழகு - அழகுக்
   கொலுவை வைக்கிறது!
கோவை இனிக்கிறது - அதுதான்
   கொள்ளை அடிக்கிறது!!

-விவேக்பாரதி
11.02.2018

Comments

Popular Posts