ஆடிக் குதிக்கும் காதல்


மகாகவி பாரதியாரின் "கன்னத்தினில் குயில் சத்தமே" என்ற காவடிச்சிந்தின் மெட்டு...

வண்ணக் கவிதையின் சந்தமே - என்றன்
    வாழ்வினுக் கேயுற்ற சொந்தமே - அந்த
    வானம் கொடுத்திட்ட பந்தமே - மலர் 

வனமேயுன தழகேயிசை
வளமேதனி யிதமேயென
   வார்த்தைகள் சொல்ல வசந்தமே - என்றன்
   வாயினில் தேன்வந்து சிந்துமே!


எண்ணத் தினித்திடும் நங்கையே! - மலர்
    ஏந்தும் நகமுன்றன் செங்கையே! - எனை
    என்றும் விரும்பிடும் மங்கையே - தடை
எதுவாகிலு முனதாசைக
ளுடனேநிறை வெனவாகிட
    ஏற்றி இயற்றிடும் எங்கையே! - நான்
    எப்போதும் உன்றன் சதங்கையே!

பாருக் கதிசயம் சொல்லுவேன் - உனைப்
    பார்த்த விடத்திலே புல்லுவேன் - புகழ்
    பாடிப் பாடிக்காலம் தள்ளுவேன்! - வரும்
பகலாகினு மிரவாகினும்
படர்மாலையின் பொழுதாகினும்
    பாவை வனப்பினில் துள்ளுவேன் - உன்றன்
    பாதைத் துணையெனச் செல்லுவேன்!

நேருக்கு நேர்நின்று கொஞ்சுவேன் - இடை
    நெளிவில் இருந்திடக் கெஞ்சுவேன் - உன்றன்
    நெற்றி சுருங்கிடில் அஞ்சுவேன்! - உண்மை
நெறிதானடி யுரைதானடி
நினதோரெழில் மறவேனடி
    நெஞ்சிலுனை வைத்துத் துஞ்சுவேன் - அந்த
    நேரத்தில் தான்கொஞ்சம் மிஞ்சுவேன்!

ஜோடிக் கதிரவன் கண்களோ? - முக
    ஜோதி ஒளிர்விடும் திங்களோ? - இனம்
   சொர்க்கம் வசிக்கின்ற பெண்களோ? - இதழ்
சொலுமோசையில் வரும்பாஷைகள்
அமுதாகிடு கவியோவெனச்
    சோதிக்கத் தீர்பவை எண்களோ? - புதுச்
   சோலைகள் நின் மருமங்களோ?

ஆடிக் குதித்திடும் பெண்மையே - அழ
    காளப் பிறந்திட்ட பொம்மையே - என்
    ஆவி உனைத்தொடும் அண்மையே - தொழும்
அடியாரென விழுவேனுன
ததிகாரமு மறிவேனெனை
    அண்டி நெருங்கிடும் தன்மையே - தனில்
    ஆசை உயர்த்துவன் உண்மையே!!

-விவேக்பாரதி
26.11.2017

Comments

Popular Posts