வைஷ்ணவ ஜனதோ - தெய்வீக தேசம்ஹிந்து மித்திரன் பத்திரிகையில் மார்ச் 2018 இல் வெளியான எனது கட்டுரை

வைஷ்ணவ ஜனதோ – தெய்வீகதேசம்
கவிஞர் விவேக்பாரதி
  
    காந்திஜியைக் கவர்ந்தால் எனக்கும் பிடித்த பாடலாக இது ஆனதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், வைஷ்ணவ ஜனதோஒரு நல்ல கருத்துள்ள அருமையான ஹிந்தி பஜனைப் பாடல்.நரசிங்க பகத் (எ) நரசிங்க மேத்தா என்னும் குஜராத்திக் கவிஞர் எழுதிய ஒரு கீர்த்தனை இது.இந்தக் கீர்த்தனையை இசைஞானி இளையராஜா அவர்கள் அமைத்திருக்கும் இசையில் விபா ஷர்மா அவர்கள் பாடி இருக்கும் விதத்தைக் கேட்டாலே அந்த நெகிழ்வு நமக்கு விளங்கும். காந்திஜியை ஈர்த்தது கண்டிப்பாக அவரது குரலாகவோ, இசைஞானியின் இசையாகவோ இருக்காது, வேறென்ன? இந்தப் பாடலின் பொருள். அதுதான் இப்பாடலை அவர் உயிருக்கு அணுக்கமாக வைத்திருந்தமைக்கு ஒரே காரணம் என்று சொல்ல முடியும். அப்படி என்ன அதன் பொருள். காந்திஜி அவர்கள் பிறப்பால் ஒரு விஷ்ணு பக்தர். குறிப்பாக ராம பக்தர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே இந்தப் பாடலும் ஒரு வைணவன் எனப்பட்டவன் எப்படி இருப்பான் என்று நரசிங்க மேத்தா அவர்கள் இயற்றிய பாடலேயாம்.

 நரசிங்க மேத்தா
  
ஐந்து வயதிலேயே தாய் தந்தையரைத் தொலைத்து, எட்டு வயதுவரை பேச இயலாத ஒரு பிள்ளையாக அண்ணன் வீட்டில் வளர்ந்தவர் நரசிங்க மேத்தா. அவர், அவரது பக்திக்காக அண்ணியாரால் வெறுக்கப்பட்டு வந்தார். அவரது ஏச்சுகளும் வசைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, ஒருநாள் வீட்டைப் பிரிந்து காட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கே ஒரு சிவலிங்கத்தின் முன் அமர்ந்து ஏழு நாட்கள் உபவாசமும் தியானமும் மேற்கொள்ள, சிவபெருமான் அவருக்கு முன் தோன்றி அவரது ஆசைக்கு இணங்க பிருந்தாவனத்திற்கு அழைத்து வந்து அதன் ரம்மியக் காட்சிகளையும் கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளையும் விவரித்துச் சொல்லலாயினார். மேலும் கிருஷ்ண பரமாத்மாவே நரசிங்கரிடம் தனது லீலைகளைக் கவிதையாக வடிக்குமாறு பணித்தார். அதன் விளைவாக நரசிங்க மேத்தா கண்ணன் மீது தீராத பக்தி கொண்டவராய் அவரது லீலைகளையும் ரசவாதங்களையும் குஜராத்தி மொழியில் அருமையான கீர்த்தனைகளால் பாடி, அவர் வசித்து வந்த கிராமங்களில் இருந்த ஹரிஜன மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வாழ்ந்து வந்தார். பொதுக்கூட்டங்களில் வைணவர் பெருமைகளைப் பாடலாகப் பாடி பிரபலமானவர் நரசிங்க மேத்தா. இறுதிக் காலம் வரைக்கும் தான் பிறந்த மண்ணின் மீதும் கிருஷ்ண பரமாத்மா மீதும் உயர்ந்த பக்தி கொண்டு வாழ்ந்தவர் நரசிங்க மேத்தா. அவர் எழுதியிருக்கும் கீர்த்தனைகள் 22,000 என்று அறியப்படுகின்றது. மேலும் குஜராத்தி மொழியின் ஆதிகவி என்று இவரைப் போற்றுகிறார்கள். அவரது புகழ்பெற்ற கீர்த்தனைகளில் ஒன்று "வைஷ்ணவ ஜனதோ" என்ற பாடல். அது எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல். ஒரு தேசாபிமானம் மிக்க ஒருவரால் இந்தப் பாடலைக் கண்டிப்பாக விலக்க முடியாது என்றும் சொல்லலாம். "வைணவன் என்பவன்" என்று துவங்கி ஒரு வைணவன் எப்படி இருக்க வேண்டும் என்று கூற வந்திருக்கும் நரசிங்க மேத்தா அவர்கள், அதே இலக்கணம் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்படி எழுதியிருக்கும் பாங்கே அந்த தேச ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது. அந்தப் பாடலை ஓரளவு தமிழில் மொழிபெயர்த்துக் காட்டினால் அதன் பொருளும், அதன் பொதுத்தன்மையும் விளங்கும்.

 பாடலின் தமிழாக்கம்:
 
வைணவர் என்று தமைத்தாம் சொல்பவர்
அடுத்தவர் வலிகளை அறிவாரே!
துன்பத்திலே உபகாரம் செய்பவர்!
இருப்பினும் கர்வம் அடையாரே!

சகல மனிதரையும் வணங்கிடும் அவரே
யாருக்கும் இழிவை நினையாரே!
சொல்செயல் எண்ணம் தூய்மையாய் வைப்பவர்
பெற்றவள் அருளை அடைவாரே!

யாரையும் சமமெனப் பார்த்திடுவாரே
பெண்களைத் தம்தாயை மதிப்பாரே!
அவர்களின் நாவும் பொய்யே சொல்லாது
அவர்கைகள் பிறர்பொருள் எடுக்காதே!

பந்தங்களுக்குள் அகப்பட மாட்டார்!
உலக இன்பத்தில் மூழ்காரே!
ராம நாமமே சொல்லிடுவாரே
புண்ணிய கோயில்கள் ஆவாரே!

பொய்யும் பொறாமையும் விலக்கி வாழ்பவர்
கோபத்தைக் காமத்தை நெருங்காரே!
அத்தகையோரைப் பார்த்து வணங்குவேன்
அவர்குணம் முன்னோரைக் காட்டிடுமே!


பாடலின் கருத்து:

 வைணவர் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்ளும் மக்கள், அடுத்தவர்களது வலிகளை அறிந்திருப்பார்கள். அவர்கள் பிறர்படும் துன்பத்தைப் போக்க அவர்களுக்கு உதவவும் செய்வார்கள். அதைவிடப் பெரியது எத்தகு உதவிகள் செய்தாலும் அதற்காகத் 'தான்' என்ற கர்வம் எழாத மனிதராக எளிமையாக வாழ்வார்கள்.

வைணவர் என்று சொல்பவர்கள், உலகத்தில் உள்ள அனைவரையும் வணங்கி வாழ்வார்கள். யாருக்கும் எந்த நேரத்திலும் தீமையோ, இழிவோ நினைக்க மாட்டார்கள். அவர்கள் சொல்கின்ற சொல், செய்கின்ற செயல், சிந்திக்கின்ற எண்ணம் என்று தம்மிடமிருந்து வெளிப்படும் அனைத்திலும் தூய்மையானவராக இருப்பார்கள். அப்படி இருப்பவர்களது தாய் பேரருளை அடைவார்கள்.
 
வைணவர் என்பவர், அனைவரையும் சமமாகப் பார்த்துப் பழகுவார். எல்லா பெண்களையும் தத்தம் தாய்மார்களையும் உயர்வாகப் போற்றி வணங்கிடுவார்கள். அப்படிப்பட்ட மக்களின் நாக்கு பொய்யே சொல்லாது, அவர்களது கைகள் பிறரது பொருளைக் கவராது.
 
வைணவர்கள், எத்தகைய தீய கட்டுகளுக்கு உள்ளும், பந்தங்களுக்கு உள்ளும் அகப்பட மாட்டார்கள். அவர்கள் நிலையில்லாத இந்த உலக இன்பத்தில் ஒரு பொழுதும் மனம் லயிக்க வைத்து மூழ்கிப்போக மாட்டார்கள். தமது கடவுளாக ராமபிரானின் நாமத்தையே எந்நேரமும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருப்பதனால் தாங்களே கடவுள் வாழும் புண்ணியமான கோவில்களாய் மாறிவிடுவார்கள்.

 வைணவர் எனச் சொல்பவர், பொய் சொல்ல மாட்டார்கள். மற்றவர்களின் மீது பொறாமை கொண்டு அவர்களைப் பற்றிப் புரளிகளை, பொய்களைச் சொல்ல மாட்டார்கள். காமம் கோபம் முதலிய மனித அமைதிக்கு விரோதமான உணர்ச்சிகளின் மீது நாட்டம் கொள்ளவே மாட்டார்கள். அத்தகையோரை நான் நேரில் கண்டு, உயர்வாய் மதித்து வணங்குவேன். அவர்களது இத்தகைய நல்ல குணங்களே அவர்களது குலப்பெருமைகளைக் காட்டும்.


நாம் உணர வேண்டியவை:
  
நரசிங்க மேத்தா, வைணவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பாடியிருக்கும் இந்தப் பாடலின் நிறைய கருத்துகள் ஒரு உத்தமமான குடிமகன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று வரையறுக்கும் விதமாக இருக்கின்றது. அவர் சொல்லி இருக்கும் படியெல்லாம் ஒரு வைணவர் என்பவர் இருந்தால், அவர் ஒரு உன்னதக் குடிமகன் ஆவார். நரசிங்க மேத்தாவின் இந்த கீர்த்தனையில் அவரது தெய்வபக்தியோடு தேச பக்தியும் தெரிகின்றது. மற்றவர்கள் வலிகளை அறிந்து, அவரது துன்பங்களில் உதவி புரிந்து, கர்வம் மறந்து, சகல உயிர்களையும் வணங்கி, யாருக்கும் அழிவு நினைக்காமல், சொல் செயல் எண்ணம் ஆகியவற்றைத் தூய்மையான கடமையாகக் கொண்டு, பெற்றவர்கள் பெருமையடைய நடந்துகொண்டு, எல்லோரையும் சமமாகப் பார்த்து, பெண்களையும் தம் தாயையும் மதித்து, நாக்கில் பொய் சேராமலும், கைகள் பிறரது சொத்துகளைத் தேடாமலும் வாழ்ந்து, பொய்யான பந்தங்களுக்குள் அகப்படாமல், உலக இன்பங்களுக்கு மதிமயங்கி மூழ்காமல், தமது கடவுளின் பெயரையே சொல்லி, அவர்களது நெஞ்சங்களே அத்தகு கடவுளர் வசிக்கின்ற தூய்மையான கோவில்களாக மாற்றி, பொய்யையும் பொறாமையையும் விலக்கி, காமத்தையும் கோபத்தையும் நெருங்காமல் வாழ்பவன் தானும் வாழ்ந்து அடுத்தவரையும் வாழ வைக்கும் ஒரு உன்னதமான குடிமகன் ஆகிறான். இத்தகு உயர்ந்த கருத்துகள் கொண்ட பாடலைத் தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதரும் போற்ற வேண்டும். இப்படி வாழ்வது ஒருவரை மகாத்மாவாக ஆக்கும் என்பதில் ஐயமில்லை. 

-விவேக்பாரதி 
27.02.2018
 

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி