துர்கைக்கு அழைப்பு

சுற்றி இருக்கும் பொய்மை உலகில்
    சுடரின் வெளிச்சம்கொடு - ஒரு
பற்றைப் பிடித்துப் பாரில் நடக்கப்
    பாதச் சுவடுகொடு!
நெற்றி முகப்பில் நெருப்புக் கோளம்
    நேரே நடந்துவிடு! - உன்
கற்றைச் சடையால் காற்றாய் வருடிக்
    கவிதை கொடுத்துவிடு!

அம்மா என்றே நானும் அழைக்க
    அண்டி அமர்ந்துவிடு - அட
சும்மா இன்னும் விளையாட் டென்ன
    சுவையாய் முத்தம்கொடு!
இம்மா நிலத்தை எழுதும் ஆற்றல்
    இதயத் தளத்திலிடு! - உன்
பெம்மா னுடன்நீ ஆடும் களியைப்
    பேதை விழிக்குக்கொடு!

சிவனின் பாகம், சிறந்தோர் நெஞ்சம்,
    சிறப்புப் பீடங்கள், - பல
அவனி முழுக்க ஆடும் காற்றில்
    அசையும் தேர்க்கோலம்,
கவிதை பாடும் கவிஞர் நாக்கு,
    கருத்தில் அமர்பவளே - பின்
எவணென் நெஞ்சில் ஏறி அமர்ந்தாய்?
    எனக்குச் சொல்லுமையே!

மீண்டும் மீண்டும் பிறந்து நின்றன்
    மின்னல் நேர்முகத்தை - அருள்
தூண்டும் கவிதைத் தூசால் வருடித்
    தொட்டுத் தாலாட்டி
வேண்டும் வேண்டும் எனநீ கேட்க
    வேண்டும் பணிசெய்து - எனை
ஆண்டாய் நீயென் றகத்தே மகிழும்
    அந்தப் பதவிகொடு!

மடியில் அமர்த்தி மதுவைப் புகட்டி
    மயங்கி விழவைத்து - ஓர்
அடியி லெழுப்பி அண்ட நிழலை
    அகத்தில் விழவைத்துத்
துடிக்கும் நெஞ்சைத் தூக்கி நிறுத்தித்
    தொல்லை அறவைத்து - சொல்
படிக்கு நடக்கும் பழக்கம் அதனைப்
    பரிவாய்த் தந்துவிடு!

காளி நீலி கங்கா ளிசா
    முண்டி பைரவியே - எனைத்
தோளில் ஏற்றி அகிலம் காட்டும்
    தோன்றாப் பெருநிதியே!
நாளும் நாளும் அலையும் வாழ்வை
    நல்ல வழியில்விடு! - மடித்
தூளி யளித்துக் கனவு கொடுக்கும்
    துர்கே வந்துவிடு!!

-விவேக்பாரதி
15.03.2018


Comments

Popular Posts