புனைப்பெயர்

அழுகையோடு ஏக்கமாய்ப் பார்க்கும்
இதழெச்சில் உமிழ் மனம் அறிந்து
இழவு வீடு பெருக்கிய
துடைப்பம் போட்டு,
ஆடை தளர்த்த,
அமுது சுரக்கிறது
மார்பொன்று!


மூன்று கால்களுடன்
தள்ளாடி நடந்தவருக்குத்
தான் தாய் மடியில் அமர்ந்து
இருக்கை பகிர்கிறது
பீப்பி ஊதும் வாயொன்று!

அறியாமல் திணறித் தவிக்கும்
அகக் குறிப்பை அறிந்து
காதைத் திருகிக் கண்டித்துப்
படிக்க அவகாசம் தருகிறது
சாக்பீஸ் கரை படிந்த
கையொன்று!

கையுரசி மெய்யுரசும்
கயவனுக்கு இடையில் கவலுறும்
ஒருத்திக்குக் காவலாய்
நடுவில் அவதரிக்கிறது
பேருந்தில் கைதட்டி வந்த
கையிரண்டும்!

அலைபேசியைப் பறிகொடுத்த அவனுக்குத்
துணையாகி, திருடனைத் தாங்கிப் பிடித்து
கோணி ஊசியைக்
காதில் செருகிப்
புன்னகைக்கிறது முகமொன்று!

வெய்யிலில் வாடி நடப்பவனுக்கு
இடம் சேர இருக்கை தந்து
கூட்டிச் செல்கிறது!
தலைக்கவசம் அணியாத தலையொன்று!

கவிதைக்குப் பொருள் தேடித்
தவிக்கும் கவிஞன் முன் கை நீட்டி
எழுதென்று சொல்லி
கண் சிமிட்டுகிறது,
ரப்பர் பொம்மை மெல்லும்
இதழொன்று!

இரண்டாம் காட்சி முடிந்து
இருட்டுச் சாலையில்
ஆண்மைக்கும் அச்சம் கொடுக்கும்
அர்த்த ராத்திரியில்
உறுதுணையாக ஒலி எழுப்புகிறது
ஒன்றரை மணிக்கும்
ஓடும் ஆட்டோ ஹாரன்!

எதிர்பார்த்தும், பாராமலும்,
கடனாகவும், கடமையாகவும்,
தோழமைக்கும், லாபத்திற்கும் என்று
உற்ற பொழுதில்
ஒரு தரம் உதவ வருவோரை நோக்கி,
நம் வாயுதிர்க்கும்
"அம்மா" "ஐயா" "அண்ணே" "அக்கா"
"என்னங்க" "தம்பீ" "பாப்பா"
என்னும் முகமறியா உறவுப் பெயர்கள்,
இறைவனின் புனைப்பெயர்களாகவும் இருக்கலாம்!!

-விவேக்பாரதி
17.03.2018

Comments

Popular Posts