உதித்தல் வேண்டும்!

காலமெனும் கலைஞன் கைகள்
   காட்டுகிற திசையில் சென்று
கோலமுடன் நடனம் செய்யும்
   கூத்தாடி மனித வாழ்வில்
சீலமுடன் ஒளிதான் சேரச்
   சிறப்புகளை நாமு ணர்ந்து
ஜாலமெலாம் செய்யும் நன்னாள்
   ஜகத்தினிலே நேர்ந்தி டாதோ?

ஆட்டுகிறான் ஆடு கின்றோம்!
   அசைக்கின்றான் பேசு கின்றோம்
கூட்டுவித்தான் கூடி நின்றோம்
   கூச்சலிட்டு வாழு கின்றோம்!
நாட்டுமவன் கைக ளைநாம்
   நடத்திடவே கற்றால் வாழ்வில்
வாட்டமிலை என்னும் உண்மை
   வாக்கினைநா முணர்ந்தி டோமோ?

உளத்தினிலே உறுதி! சொல்லை
   உயர்த்துகிற துணிவு! புத்தித்
தளத்தினிலே ஞானம்! இன்னும்
   தரணியிலே தேவை எல்லாம்
வெளிப்படையாய் வைத்துப் பல்லோர்
   வாழ்ந்திடவே வாழ்ந்து மக்கள்
களிப்படையாய் வாழும் சேதி
   காணொலிகள் காட்டி டாதோ?  

எத்தனைநாள் ஏங்கிக் கொண்டே
   எழுதுவதோ? அறிவார்ந் தோர்கள்
புத்தனைப்போல் ஆசை தீர்ந்து
   பூமியிலே இன்பம் கொள்ளச்
சித்தனையும் சிவனை யும்போல்
   ஜீவன்களை மதித்து வாழும்
அத்தனையும் நடக்கும் காட்சி
   அழகுகளைக் கண்டு கண்டு

சிந்தனையால் வாழ்த்தி! நேரும்
   சிறப்புகளை போற்றி! செய்ய
மந்திரங்கள் கோடி பன்னி
   மண்ணிலொரு சொர்க்கம் ஆக்கி!
வந்தனைகள் செய்யும் மட்டும்
   வார்த்தையிலை வற்றா வண்ணம்
முந்துகடற் கவிதைக் காற்று
   மூளையிலே உதித்தல் வேண்டும்!!

-விவேக்பாரதி
12.07.2017

Comments

Popular Posts