தேகம் மறைத்த குயில்

சமையற் கட்டின் ஜன்னல் வழியே
    சாதகம் கேட்கிறது!
சாப்பிடத் துடித்த வயிற்றின் முன்னம்
    செவிதான் ஜெயிக்கிறது!
அமர கானம் செவியில் பாய
    அகந்தான் பூக்கிறது!
ஆனந் தத்தில் பூங்குயில் யாரென்
    றாசை கேட்கிறது!

தேனைக் குழைத்துப் பன்னிய குரலோ?
    தேகம் வீணையதோ?
தெளிந்த நீராய்ப் பளிங்குப் பாடல்
    திறமை வாணியதோ?
வானம் பாடி மானுட மொழியில்
    வந்தே பாடியதோ?
வாடைக் காற்றில் பாடல் கேட்டு
    மனந்தான் ஆடியதோ?

பாடல் கேட்கும் திசையினி லெல்லாம்
    பரவசத் தேவியினாள்,
பவளச் செவ்வாய் திறந்து சிரிக்கும்
    பக்குவம் தெரிகிறது!
தேடல் கொள்ளும் உயிரினில் மெல்ல
    தென்றல் அடிக்கிறது!
தேடித் தேடிப் பார்த்தும் பூங்குயில்
    தேகம் மறைக்கிறது!!

-விவேக்பாரதி
22.03.2018

Comments

Popular Posts