போதை வண்டு

தேனுண்ட பூச்சியை வண்டுண்ணுகிறது. அந்தத் தேன் பொன்வண்டின் வாயிலும் பட்டு, இதுவரை தேன் சுவை அறியா வண்டு போதை கொள்கிறது. தன்னை மறக்கிறது.

பொன்வண்டு பாடிடும் பாட்டு - புதுப்
   போதையில் பாடிடும் பாட்டு! - மது
உண்டம யக்கத்தின் பாட்டு - கொஞ்சம்
   உளறல் கொண்டிடும் பாட்டு! - ஒரு
வண்ண மலருக்கு மேலே - மது
   மாந்தி யிருப்பத னாலே - என
தெண்ணம் பறப்பது கண்டீர் - அதில்
   ஏறும் கவிதைகள் காணீர்!

காலுக் கடியினில் விண்மீன் - தலை
   கவிழ்ந்து நடக்கின்ற கோலம்! - அட
மேலும் நிலவுகள் வந்து - என்
   மெத்தையென் றாகிய காலம்! - சுவை
பாலும் நறுமலர்த் தேனும் - என்
   பக்கத்தி லாறென வோடும் - கருங்
கோலக் குயில்வந்து காதில் - நல்ல
    கோபுரக் கீர்த்தனை பாடும்!

மற்றை உயிரினம் எல்லாம் - எனை
   மன்ன னெனச்சொல்லி போற்றும் - இவன்
ஒற்றைக் கவியெனத் தோளில் - மிக
   ஒய்யார மாய்ப்புகழ்ந் தேற்றும் - சுதி
சற்றும் விலகுவ தில்லை - என்
   சாதகம் கேளுங்கள் ரிங்ரிங்! - யான்
பெற்ற தனம்பெரி தில்லை - என்
   பேச்சுக்கும் பாட்டுக்கும் முன்னால்!

வானவர் என்னுடை தோழர் - நான்
   வாழு மிடமெங்கும் சொர்க்கம் - இசை
கானவர் என்னுடை சீடர் - என்
   கவிதை முகில்மிசை ஊற்றும்! - தனி
மோனச் சுருதியும் பாட்டாய் - என்
   முத்தமிழ் நாவிடை மாறும் - பெரும்
ஞான முடையபொன் வண்டு - அட
   நானுமோர் அற்புத வண்டு!

கைகளைப் பின்னேம டக்கி - ஒரு
   காலில் மறுகாலைப் போட்டு - என்
மெய்களைப் பேகிட விங்கே - புது
   மேன்மைத் துயில்கொளு கின்றேன்! - சிலர்
பொய்களைக் கூறியென் தூக்கம் - கெடப்
   பொல்லா வினைகளைச் செய்வார்! - அவர்
பொய்களை நீக்கியென் பெற்றி - சொல்ல
   போகக் கவியிதைச் செய்தேன்!

இது
பொன்வண்டு பாடிடும் பாட்டு - புதுப்
   போதையில் பாடிடும் பாட்டு! - மது
உண்டம யக்கத்தின் பாட்டு - கொஞ்சம்
   உளறல் கொண்டிடும் பாட்டு!!

-விவேக்பாரதி
24.03.2018

Comments

Popular Posts