இவள்தானோ?


கார்முகிலைச் சாறெடுத்துக் கண்ணின்மை ஆக்கியவள்
வார்சடையில் பூமுடித்து வாஞ்சையுடன் நோக்குகிறாள்
நேர்சிலையாம் புருவத்தால் நெருப்புவிழி அம்புருவி
மார்பகத்தில் பாய்ச்சுகிறாள் மதனரதி இவள்தானோ?

இதழிடுக்குப் புன்னகையால் இருதயத்தைப் பந்தாடி
நிழலிடுக்கில் எனையடைத்து நீள்சடையில் கட்டிவிட்டாள்
குழலிடுக்கில் மொழிமறந்து கொள்ளையனாய் நானிருக்க
எழிலிடுக்கைக் காட்டும்விண் ஏந்திழையாள் இவள்தானோ?

நிலமிசையில் கால்தோயா நிலையுடனும்! வாடாத
மலரழகைத் தாங்கியதோர் மாலையினாள் பார்பைபட
உலைமிசையில் வைத்திருக்கும் உறிவெண்ணெய் போல்நெஞ்சு
நிலைகுலைதல் ஆகிறதே! நிலவழகி இவள்தானோ?

உடைவழியே தெரிகின்ற உயிர்கொடுக்கும் அங்கங்கள்
இடைவழியே தெரிக்கின்ற இயல்பான மின்னலொளி
கடைவிழியில் அஞ்சனத்தின் காட்சியெல்லாம் சூழ்ந்திடவே
படைவழியில் வருகின்றாள் பாரழகி இவள்தானோ?

சிந்துவெனத் துள்ளுநடை சிற்றிடையில் மணியசைந்து
சந்தநடம் பயின்றிடவே சறித்துவிடப் பார்க்கின்றாள்
இந்தநடம் கண்டுவிட்டால் இந்திரனைப் போயெதிர்க்கும்
அந்தநலம் தோன்றுதுவே அரம்பையுமே இவள்தானோ?


-விவேக்பாரதி 
18.03.2018

Comments

Popular Posts