விசில் ஒலி


மாலை மயக்கத்தில் வான விளிம்பினை
    மட்டும் ரசித்தங்கு நின்றிருந்தேன்!
கோலக் குயில்மொழி கொஞ்சிக் களித்திடக்
    கொட்டிய ராக மயக்கமது!
நீல விசும்பினில் ஏறிச் சிரித்திடும்
    நித்தில ராணி நிலவினைப்போல்,
காலம் மறந்திட்ட காட்டுக் கவிஞனைக்
    கண்டு குயில்கள் சிரித்தனவே!


சித்தம் தெளிந்திட சற்று விழித்தவை
    சிந்தும் சிரிப்பை ரசிக்கையிலே
பத்துப் பனிரெண்டு பச்சைக் கிளிவந்து
    பாடலைப் போலங்கு பேசினவே!
புத்தம் புதுக்குரல் கண்டும யங்கிய
    புத்தியை யொற்றைச் சலங்கையொலி
தத்திக் கலைத்தெனைத் தன்பக்க மீர்த்துத்
    தனதெழில் மேனியைக் காட்டியதே!

தேவதை போலொரு பெண்மணி வந்திளந்
    தென்றலைப் போலவே புன்னகைத்தாள்!
சாவதை யன்றிவே றேதுக்கு மஞ்சிடாச்
    தைரிய நெஞ்சு சரிந்ததங்கே!
ஆவதில் லையிவள் அன்புத்தொல் லையென
    அண்டிடும் வேளை விசிலினொலி,
போவெனத் தள்ளிய கூட்ட நெரிசலில்  
   பொத்தென வீழ்ந்தனன் பஸ்ஸைவிட்டே!!

-விவேக்பாரதி
06.03.2018

Comments

Popular Posts