தனிச்சாலை

யாருமில்லாதொரு சாலை - என்
கால் நடமாடும் வேளை
நெஞ்சில் போரின் மலை,
கண்ணில் நீரின் அலை!

நிலவுடன் பேச நடக்கின்றேன் - என்
நிழலுடன் ஆடிக் களிக்கின்றேன்!
மலர்கள் மலரும் மர்மக் கனவை
மானுடக் கண்களில் காண்கின்றேன்! - ஒரு
மகிழ்வின் கிரீடம் பூண்கின்றேன்!

ஓய்ந்த தெருக்களின் கும்மாளம் - இடம்
ஒதுங்கும் தெருநாய்ப் பட்டாளம்
வேய்ந்த இருளை வென்று நடக்க
வேக நடையில் உற்சாகம் - அதை
வேண்டும் நெஞ்சம் இசைபாடும்!

மீனும் நிலவும் துணையாக - ஒளி
மின்னல் சொல்லில் உருவாக
நானும் நடக்கும் நகரத் தெருவில்
நல்லமைதி நிலையாக - நான்
நடையிடு கின்றேன் தனியாக!

கனவை ஆக்கும் மனம்தானே - அந்தக்
கனவில் சிக்கி உழல்கிறது
தினமும் வருடும் தென்றல் கூட
புயலின் போது சுடுகிறது - அதைப்
புத்தி பின்தான் உணர்கிறது!

பூட்டு போடும் ஆசையொடு - நம்
புரியா ஆட்டம் சாவியுடன்!
ஆட்டும் கலைஞன்! ஆடும் பொம்மை !
ஆசைப் பூட்டு கயிறாகும் - அது
அறுபடத் தெய்வம் முன்தோன்றும்!!

-விவேக்பாரதி
30.03.2018

Comments

Popular Posts