எழுதாம இருக்க முடியல...எழுதாம இருக்க முடியல - இந்த 
ஏழைக்கு வேறொன்னும் தெரியல 
பாடாம வாழ முடியல - புதுப் 
பழக்கமித மாத்த வழியில்ல! 

அழகாவே எல்லாம் வெச்சி 
ஆண்டவன் படைச்சான்! - அத 
அப்படியே பாடச்சொல்லி 
என்னையும் படைச்சான்! 
மெழுகால செஞ்ச மனசு 
உருகி உரையுது - அது 
மேலும் கீழும் உருண்டையாகி 
ஒசந்து விழுகுது! (எழுதாம)

அதுவாக கண்ணு முன்ன 
ஆடிக் காட்டுது! - அதுல 
அசந்துபோகும் மனசு பாட்டப் 
பாடித் தீக்குது! 
புதுசாகப் பழசாக 
புத்தி மாறுது! - கொஞ்சம் 
புரிஞ்சிக்கிட்டா வார்த்தையில 
சக்தி ஏறுது! (எழுதாம)

எனக்கொன்னும் தெரியாது 
எழுதிடத் தெரியும் - அட 
எப்போதும் பாட்டெடுத்துப் 
பாடிடத் தெரியும்! 
தெனக்கூலி மாரியம்மா 
பாட்டு தானுங்க! - எந்தத் 
தெசையிலையும் பாட்டுத்தாயி 
ஆட்சி தானுங்க! (எழுதாம) 

-விவேக்பாரதி
01.03.2018

Comments

Popular Posts