மெல்லிய பாடல்

மாமா மகன் தூங்கும் அழகு கண்டு எழுதியது...


எங்களின் பிள்ளையும் தூங்கும் அழகினை
    எட்டியெட் டிப்பார்க்க வாருங்களே!
தங்கச் சிலையவன் தூங்கும் எழிலினைத்
    தரிசிக்க வாருங்கள் மேகங்களே!


நல்ல மழலைக் கவிதை வரைந்தபின்
    நாவலன் போலவே தூங்குகிறான்!
செல்லக் குரலினில் சங்கீதம் இட்டவன்
    தன்னை மறந்திங்கு தூங்குகிறான்!

காலை உதைத்துக் களைத்தத னாலெங்கள்
    கண்ணன் அயர்ந்திங்கு தூங்குகிறான்!
மாலை மயக்கத்தில் மற்றொரு நாடகம்
    மாற்றி நடத்திடத் தூங்குகிறான்!

இரவில் விழித்திள மீனொடு கொஞ்சிட
    இங்குக் குழந்தையும் தூங்குகிறான்!
பரவிக் கிடக்கும் உயிரினங் காளவன்
    பட்டுத் துயிலைக் கலைத்திடாதீர்!

ஞானியின் மௌனத்தை ஏந்திய செல்வனும்
    ஞாலம் மறந்திங்கு தூங்குகிறான்!
மேனி சிலிர்த்தவன் தூங்கிடத் தென்றலும்
    மெல்லிய பாடலைப் பாடுகிறான்!!

-விவேக்பாரதி
01.03.2017

Comments

Popular Posts