சந்தவசந்தச் சித்திரக் கவியரங்கம்

இறைவணக்கம் - கோமூத்ரி

இறையே முனைய எதற்கும் காப்பாம்! 
மிறையே முடிய இதற்கும் காப்பாம்!

 

தலைவர் வாழ்த்துஅட்டநாக பந்தம்

 தேன்குரலின் தலைவரவை வணங்கு 


வேழமுகன் - உடுக்கை பந்தம் 

 
வேழமு கத்தா!வா!
வாழவ ரும்பாதா!
தாழவி ழும்போதோ,
தோழன ருள்தேவே!! 

கருத்து:

யானை முகம் கொண்டவனே வருக. நான் வாழ எப்போதும் என் துணையாக வருகின்ற பாதங்களை உடையவனே வா! தான் தாழ்ந்து விழும் பொழுதாக இருந்தால் என்னைத் தாங்க உன்னைப் போலவே ஒரு தோழனை அருள்வாய் தேவனே!  


ஆறுமுகன் - அன்னபந்தம்

அன்னமே தூதாகு மற்புதமே செஞ்சினவேல்
தன்னுதயக் கையேந்துந் தாரணியாள் - பொன்னணியன்
வேலவன் சிந்தை வெருட்டத்தான் சிந்தைசுடக்
கோலவுரு குன்றுமெனைக் காட்டு!
 
கருத்து:

அன்னமே, தூதாகும் அற்புதமே (நளவெண்பா வரலாறு கருதி இப்படி விளித்தது) செம்மையான, சினம் பொருந்திய வேலைத் தன்னுடைய சூரிய உதயத்தைப் போன்ற பிரகாசமான கைகளில் ஏந்திக்கொண்டு, இந்தத் தாரணியையே ஆள்கின்ற தங்க அணிகலன் பூட்டியிருப்பவன் வேலவன். அந்த வேலவனது எண்ணம் என்னை வெருட்டி எனது சிந்தனையைச் சுடவைத்து வாட்ட, அவன் மேல்கொண்ட காதலால் எனது கோலமான உருவம் குன்றி இளைத்திருக்கும் என்னை அவனிடம் நீ காட்டு! (என் நிலையைக் கூறு என்று சொல்லப் பயன்படுத்தப்பட்டது)

ஞானமுகன் - இரட்டைநாக பந்தம் 


மலைவா ழருளே! மணிகண்ட னேயுன்
கலையழகுப் பாதங்கள் காணு மணிநிலைக்க
வாடுமாறு தீப்பிணி வந்தகாலை நீகலை
நாடுமாறு சேர்க்க நலம்!

கருத்து:

மலையில் வாழக்கூடிய அருளே! மணிகண்டனே! உன்றன் கலையழகு வாய்ந்த பாதங்களைக் காண வருகின்ற, கண்டு கொண்டிருக்கின்ற அணியான பக்தர் கூட்டம் நிலைக்க, அவர்கள் வாடுமாறு கெட்ட நோய்கள் வந்தால், வந்தபொழுதே நீ கலைத்துவிடு! அவர்கள் எப்படி நாடுகிறார்களோ அப்படியே அவர்களுக்கு நலமும் சேர்ப்பாயாக!


 -விவேக்பாரதி 
27.02.2018

Comments

Popular Posts