யாருக்குப் பாடுகிறேன்

யாவருக்கும் படுகிறேன் - உழைக்கும்
    தோழருக்குப் பாடுகிறேன்
தாவிவரும் பிள்ளைகளை - அவரின்
    தாயாகப் பாடுகிறேன்!

முன்னெழுந்து பாடுகிறேன்! - இளைஞர்
    முயன்றிடப் பாடுகிறேன்!
பின்னழுந்திக் கிடப்பவர்கள் - புயலாய்ப்
    பீறியெழப் பாடுகிறேன்!

பெண்களுக்குப் பாடுகிறேன் - அனைத்தும்
    பெற்றுவிடப் பாடுகிறேன்!
மண்ணிலுள்ள உயிர்களெல்லாம் - வாழ
    மகிழ்ச்சியைப் பாடுகிறேன்!

இயற்கையைப் பாடுகிறேன் - அதன்
    இதயத்தைப் பாடுகிறேன்!
செயற்கையைப் பாடுகிறேன் - அதன்
    செழிப்புகள் பாடுகிறேன்!

பாட்டுக்கோர் சக்தியுண்டு - அதனைப்
    பாரதம் கண்டிடட்டும்!
பாட்டைப் படித்துநிதம் - உணர்வால்
    பலசாலி ஆகிடட்டும்!!

-விவேக்பாரதி
26.10.2017

Comments

Popular Posts