பயணிப்போம்

உயிராய் இந்த உலகத்தில்
   உதித்து வந்த நாள்முதலாய்ப்
பயணம் பயணம் பயணம்தான்!
   பாரி லிதற்கோ முடிவில்லை!

சிசுவாய்த் தாயின் உடல்விட்டு
   ஜனித்து வீழத் துவங்குவது
விசைகள் தீர்ந்து விண்ணுலகை
   மிதிக்கும் வரைக்கும் தொடர்கிறது!

எதிர்கா லத்தைத் தினம்தேடி
   எதிரே ஓடும் பயணங்கள்!
புதிராய் நிறைந்த வாழ்க்கைதனைப்
   புரியா தோடும் பயணங்கள்!

எங்கே இல்லை பயணங்கள்
   எல்லாம் பயணப் படுகிறது!
பொங்கும் கதிரும் திங்களுமே
   போவதும் வருவதும் பயணங்கள்!

உணவின் பயணம் வாய்வழியே
   உடலில் சேரும் குருதியென!
உணர்வின் பயணம் நொடிநொடியாய்
   உயர்ந்தும் தாழ்ந்தும் நாட்டியமாய்!
 
சொல்லின் பயணம் மனம்சேரச்
   சுடரின் பயணம் வான்நோக்கி
நல்லோர் பயணம் ஞானத்தில்
   நாட்டோர் பயணம் மானத்தில்!

பயணம் எதுவும் முடிவதில்லை!
   பயணம் மறுக்க வழியுமில்லை!
அயரா இந்த ஆட்டத்துள்
   ஆடும் வாழ்க்கை, நதியிலிலை!

வழியோ மண்டிக் கிடக்கிறது, 
   வாழ்க்கை அதனால் தவிக்கிறது!
பழியே இல்லா வழியொன்றைப்
   பற்றிப் படரத் துடிக்கிறது!

நடக்கும் வாழ்க்கைப் பந்தயத்தில்
   நாடும் முற்றுப் புள்ளியில்லை!
முடியும் வரையில் ஓடுகிறோம்
   முடிவைக் காணா தேகுகிறோம்! 

பயணப் பாதை அவன்தீர்ப்பு!
   பயணிகள் எல்லாம் அவன்சேர்ப்பு!
தயவாய் நன்மை தனைப்பற்றித்
   தடமே பதியப் பயணிப்போம்!!

-விவேக்பாரதி
10.04.2017

Comments

Popular Posts