பைரவி வரும் வழி

"மரபின் மைந்தன் முத்தையா" பதிவிட்டிருந்த ஆதியோகி படத்தைக் கண்டதும் பாடியது..

வைர விளக்கொளி கண்மினுக்கத் - தன்
     வஜ்ஜிர தேகம் ஜொலிஜொலிக்கப்

பைரவி வரும்வழி பார்த்தபடி - எம்
    பரம னமர்கிறான் வேர்த்தபடி!

அண்டக் கருமைநி றத்தழகன் - அவள்
    ஆவி விரும்பும்து டிப்பழகன்
கண்டக் கறுமைவி ஷத்தழகன் - மஹா
    காளன் உருத்திரன் சடையழகன்!

நெற்றி விழியிமை சாந்தமுறத் - தன்
    நேரிய இருவிழி வானலையக்
கற்றைச் சடைவளிக் காடலைய - அவன்
    காத்தி ருக்கிறான் மனமிணைய!

பூத கணங்களும் ஆட்டத்தில் - ஒளி
    பூமி முழுதுமோர் கூட்டத்தில்!
வேதம் முழங்கிடும் கோஷத்தில் - அவன்
    வேண்டுதல் தீர்த்திடும் நேரத்தில்,

நிலவு சிரித்திடும் ராத்திரியில் - அவள்
    நிமலை வரவினைப் பார்த்தபடி,
உலகு துதிக்கவ மர்கின்றான் - நம்
    உள்ளப் பாறையில் அமர்கின்றான்!!


-விவேக்பாரதி 
12.02.2018

Comments

Popular Posts