விடியல்

விடியலை நோக்கி
விரைந்திடு  தோழா!
இருட்டுக்குக்  காலம்
இனி இல்லை!

வெளிச்சம் வரும் வரைதான்
இருட்டின் ராஜ்ஜியம்!
விளக்கின் ஒளி கிடைத்தால்
இருட்டோ பூஜ்ஜியம்!

கருமை போர்த்தும்
கார்காலத் துன்பங்களில்
ஒற்றை மின்னல் கீற்று
உயிர்த்துடிப்பு!

அதைச்சட்டெனப் பற்றி
ஒளிபெறும் ஈல் போல
ஒரு சிறு வாய்ப்பால்
உன் உருவம் மெருகேற்று!

எது விடியல்?
எது தான் விடியல்?
என்று திணறித் திணறித்
தீர்த்த இரவுகள் போதும்!
நம்பிக்கைக் கண் திறந்து
கிழக்கு முகம் பார்,
வாய்ப்பு மேகங்களுடன்
வெற்றிச் சூரியன்
வாய் சிரிக்கும்!

வாய்ப்பு கிடைத்து விட்டால்
அதன் ஒளியில் மறைந்து போகும்
நட்சத்திரங்கள் ஆகாதே!
வெண்ணிலவாகு!
ஒரு துளி ஜோதி கிடைத்தாலும்
உடனே கிரகித்து
உலகுக்கு வழங்கு!

நீ ஒளியாகிப் போனால்
வெற்றி,
இரவின் அல்லியாகவும்
பகல் சூரிய காந்தியாகவும்
உன் புறம் திரும்பும்!
உனக்காய் அரும்பும்!

தோழா!
துன்பம் தொடர்வது அல்ல,
முடிவது!
விடியல் அடைவது அல்ல,
எழுவது!!

-விவேக்பாரதி
15.02.2018

Comments

Popular Posts