தேன் தேன்

மலர்த்தேன் மலைத்தேன் இதழ்த்தேன் துளித்தேன்
    மனத்தேன் கவிதைகள்தேன்
உலைத்தீ ஒருதேன் உலகம் பெரும்தேன்
    உவகை புதுவகைத்தேன்
நிலைத்தேன் எனநான் நினைத்தேன் குதித்தேன்
    உயிர்த்தேன் உருகிடும்தேன்
சிலைத்தேன் விழித்தேன் சிலிர்த்தேன் குளிர்த்தேன்
    சிலதேன் சுவைத்திடும்தேன்!

மழைத்தேன் நதித்தேன் சுனைத்தேன் இளநீர்
    மரத்தேன் இனிமையின்தேன்
கழைத்தேன் இசைத்தேன் வளித்தேன் விளித்தே
    கலக்கிடும் கலைகளின்தேன்!
குழைத்தேன் உணர்வின் குவித்தேன் உயர்த்தேன்
    குணத்தேன் உரிமையின்தேன்
இழைத்தேன் சுவைத்தேன் மொழித்தேன் கொடுத்தேன்
    இனித்தேன் உணர்வுகள்தேன்!

எதைத்தேன் எனநாம் அழைப்போம் அதுவும்
    எல்லாமும் புதுத்தேன்
பொதுத்தேன் நிதித்தேன் விதித்தேன் இறைவன்
    புகழ்த்தேன் புரியாத்தேன்
கதைத்தென் மனத்தின் நினைத்தேன் நினைத்த
    கருத்துத்தேன் வழிதேன்
இதைத்தேன் எனநான் கொடுத்தேன் முடித்தேன்
    இதுதேன் இதுவும்தேன்!!

-விவேக்பாரதி
12.02.2018

Comments

Popular Posts