என் தந்தைக்குப் பிறந்தநாள்,

உமையாளைப் பாடுபவன் சிவனைப் பாடும்
    உணர்ச்சியிலே நிற்கின்றேன்! நானும் இங்கே
அமையத்தான் வித்திட்ட எந்தாய்! என்றும்
    அழகனெனத் தாய்கொஞ்சும் ஸ்ரீனிவாசா!
குமைகின்றார் நண்பரெலாம் அவருக் கும்போல்
    குணமான தந்தைதாம் கிடைக்க! என்னைச்
சமைத்தவொரு சாமி!நினை வாழ்த்து கின்றேன்!
    சகலமும்யான் உன்னில்தாம் கற்றேன்! சொல்வேன்!

அஸ்திவாரம் தாயேதான்! அடித்தளம் நீ!
    அதுதாங்கும் பாரம்விட அதிகம் உண்டு!
குஸ்தியிடும் விளையாட்டில் குழந்தை என்னை
    குறும்பாக வென்றிடவைத் தென்னை வெல்வாய்!
பசுமரத்தில் பதிகின்ற கீறல் போல்நீ
    பட்டதெலாம் எண்ணியெமைக் காப்பாய்! உன்றன்
விஸ்வரூபம் பார்த்ததுண்டு சேட்டை செய்யும்
    விஷமமுகம் பார்த்ததுண்டு! படித்த துண்டு!

குழந்தையென நீபிறந்தாய் ஒரு பிறப்பில்
    குதூகலமாய் மனம்போலே வாழ்ந்தி ருந்தாய்
குழந்தையென நான்பிறந்த கணத்தில் மீண்டும்
    குவலயத்தில் நீபிறந்தாய் மறுபி றப்பில்!
அழகியலை அடக்கத்தை செய்கை நேர்த்தி
    அமைப்பதிலென் றெல்லாமும் தேர்ந்தாய் சொன்னாய்!
உழுமேர்நீ பயிர்நாங்கள்! வளரத் தூவும்
    உரம்சொற்கள் அப்பாநீ! வாழ்க வாழ்க!

அன்பு மகன்
விவேக்பாரதி
18.03.2018

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி