எங்கள் ஷேகி (Shaggy)

வாசலில் நின்று நிலாவைப் பார்த்தொரு கவிதை சொல்லிக் கொண்டிருந்தேன். அங்கே இருந்த எங்கள் நாய் ஏக்கப் பார்வையால் தாக்கப் பார்த்தது...."உனக்கும் பாட்டு வேண்டுமா" என்ற கணத்தில் பொலபொலவென உதிர்ந்த வெண்பாக்கள்...


யார்தாண்டிச் சென்றாலும் யாரோ வெனநினைத்து
ஊர்கூடக் கத்தி உசுப்பிடுவான் - மோர்சாதம்
உண்டே வளர்ந்திருக்கும் உத்தமனாம் எம்வீட்டு
நண்பன்தான் ஷேகியெனும் நாய்!


சோறுதனைக் கண்டாலே சொர்க்கத்தைக் கண்டாற்போல்
வீறுடனே வாலாட்டும் வித்தகன்தான் - பேறெனவே
வீடுகாக்க வாய்த்த விசித்திரன்! கைதடவ
நாடிநிற்கும் ஷேகியெனும் நாய்!

அப்பாவைக் கண்டால் அடங்கி விளையாடி
எப்போதும் என்னைமட்டும் ஏமாற்றிக் - கப்பென்று
தம்பியிடம் சிக்குண்டு தப்பிப்பான்! அம்மாவும்
நம்புகின்ற ஷேகியெனும் நாய்!

கடிக்கத் தெரியாது காது கிழிய
இடிக்கக் குறைக்கும் இயல்பன் - நடித்தெங்கள்
அன்னையின் நெஞ்சில் அமர்ந்தவன்! இன்னொரு
நன்மகன் ஷேகியெனும் நாய்!

தெருதந்த சொந்தம்! தெளிவான சிந்தை!
கருப்புடலில் காக்கும் கடவுள்! - விருப்புடனே
வான்பார்க்கும் கண்நீல வண்ணந்தான்! எப்போதும்
நான்கொஞ்சும் ஷேகியெனும் நாய்!!

-விவேக்பாரதி
03.04.2018

Comments

Popular Posts