நீயிருப்பதால்

நீயிருப்பதால் இங்கு நானிருக்கிறேன்!
நீயசைப்பதால் மண்ணில் நான்நடிக்கிறேன்!
தீயிருப்பதால் என்னைப் பாடவைக்கிறாய் ! 
திமிருப்பதால் கொஞ்சம் ஓடவைக்கிறாய்!

பூமணத்திலே எழுந்து வார்த்தை தருகிறாய்!
தாமதத்திலே என்னைத் தாங்கிக் கொள்கிறாய்!
தீமனத்தில் நீரையூற்றி நீ தணிக்கிறாய்!
நாமணக்கப் பாடல்தந்து நீ சிரிக்கிறாய்!

ஏங்கவைத்துக் கதறி என்னை எழுதவைக்கிறாய்!
தூங்கவிட்டு பின்னெழுப்பிக் கனவு தருகிறாய்
வாங்கிவிட்ட பாவமென்ன?  என்னைக் கையிலே
தாங்கிக்கொள்ள நேரமென்ன? வா அணைக்கவே!

மாலைநேரத் தென்றல் போல நீ நுழைகிறாய்!
கோலம்நூறு என்னகத்தில் நீ வரைகிறாய்!
வேலையென்ன பாரினுக்குள் என்னை வைக்கிறாய்
காலமென்னும் நூல்படைத்து நீ அசைக்கிறாய்!

ஒற்றைக் கையில் வீணையோடு நீ ஜொலிக்கிறாய்
கற்றைக் கூந்தல் காற்றிலாடத் தீ வளர்க்கிறாய்!
நெற்றிக் கண்ணன் பாதியாகி நிமிரவைக்கிறாய்
வெற்றி உண்மை வீரமாகக் கொலுவிருக்கிறாய்!
-விவேக்பாரதி
24/06/17

https://soundcloud.com/vivekbharathi/cc1smki8jvkr

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி