புதிய பாரதம்

புதிய பாரதம் பூத்திருக்கு - நம்
    புன்ன கைக்காக காத்திருக்கு
உதய மாகிடடா தம்பி - நாம்
    உண்மை தெய்வத்தை நம்பி! 


கனவு கண்களில் காட்சிகளாய் - நாம்
    கடக்கும் அன்றாட சாட்சிகளாய்
மனது வைத்துவா தம்பி - புது
    மண்ணி ருக்குமுனை நம்பி!

கூழைக் கும்பிடுகள் ஏராளம் - அவர்
    கூன்கள் நிமிராத பட்டாளம்
வாழல் பெரிதல்ல தம்பி - புவி
    வளர்த்தல் பெரிதாகும் தம்பி!

யாரைத் தேடியும் முகில்பொழியும் - இங்கு
    யாருக் காகவும் நிலவொளிரும்
ஊரைப் பார்த்துவா தம்பி - உனை
    உலகம் பார்க்குமே எம்பி!

விருது வாங்காத ஆளுமில்லை - அதை
    விலைக்குப் பெற்றாலும் புதுமையில்லை
கருதி உழைக்கவா தம்பி - தேன்
    கடமை! நாம்தேடும் தும்பி!!

-விவேக்பாரதி
03.04.2018

Comments

Popular Posts