ஈசன் உயிர்த்தெழ

உயிர்த்தெழு ஈசா!
உணர்வற்ற மக்கள்,
மாக்காளாய் மாறுமுன்
உயிர்த்தெழு ஈசா!
உயிருக்குள் உயிர்த்தெழு!


இளையவர் நெஞ்சென்னும்
இரும்புக் கோட்டை மேல்
ராஜனாய் உயிர்த்தெழு!
அவர் பட்டாளம்
தீமைக் கொட்டாளம் அடக்கும்!
உன் வரவால்
புரட்சிப் புயல்
கொஞ்சம் வெடிக்கும்!

உயிர்த்தெழு ஈசா!
உச்சாணிக் கொம்பில்
சாத்தான்கள் அரசியல்!
உன் ரத்த சுத்தம் வேண்டி
உயிர் நோகும் பக்தர்கள்!
நம்பிக்கை ரத்தத்தைக்
கோப்பையில் கொடுத்து
அவர்கள் அறியாமைப் பிணி
அறச்செய்!
இது பனிமாதம் அல்ல
ஒற்றைத் துணி மாதம்!

வெம்மைக் கரத்தின் கீழ்
வெதும்பும் ஆன்மாக்கள்
உன் கை நிழல் தேடி
உழலும் வேளையில்,
வரமென்று
தெய்வ நம்பிக்கை மட்டும் கொடுத்து
அவர்களுக்கு நிழல் சமை!
அதற்காக உயிர்த்தெழு!

நீ எழும்வரை
கனலுக்குள் கனவு வேள்வி அமைத்துக்
காலா காலம் தவமிருப்போம்!
வந்து "ததாஸ்து" சொல்லும்வரை
தர்ணா செய்வோம்!

மரி தந்த ஒளியே!
உயிர்த்தெழு!
போதி மரத்தடி வாசமும்
ஈசன் உடலில் இருப்பும் போதும்
மக்கள் மனக்காடு எரிகிறது,
உயிர்த்தெழு ஈசா!
உணர்வுப் பிழம்பு பொங்க,
உற்சாகக் கனல் தெரிக்க
சிலுவை விட்டு
மனங்களில் உயிர்த்தெழு!

உன் முள்தாள் கிரீடம்
எங்கள் முட்டாள் தனத்தை
ஒழிக்கட்டும்!!

-விவேக்பாரதி
01.04.2018

Comments

Popular Posts