வெயில் - அவள் - வெண்பா


காலை இளஞ்சூடு கன்னியவள் தேகத்தின்
கோலம் தனைக்காட்டிக் கொள்ளையிடும்! - காலை
உதிக்கும் கதிராக உள்ளத்தே ஆசை
பதிக்குமொளி காதலின் பாடு! 

*

பட்டப் பகல்வெயில் பாவை சினமனத்தின்
கொட்டமதைக் காட்டிக் கொதிபேற்றும்! - எட்ட
எழுங்கானல் நீராய் எதிரூடல் தோன்றி
விழுங்காதல் செய்யும் வினை!

*

மஞ்சள் வெயில்மாலை மங்கை முகநாணக்
கொஞ்சல் தனைக்காட்டிக் கொக்கரிக்கும்! - நெஞ்சம்
அவள்நினைப்பில் மேலே அழியும் நிலவாய்த்
துவளுமிது காதலின் தொற்று!

-விவேக்பாரதி
24.04.2018

Comments

Popular Posts