தோழியும் மழையும்
தோழி மழையில் நனைவ தாக
சேதி சொன்ன இணையமே!
வாழி அந்த வானம் என்று
வாழ்த்துச் சொல்லச் சென்றுவா!
தோழி மழையில் நனைவ தில்லை!
தோன்று மந்த துளிகள்தாம்,
கீழி றங்கி யவளு டல்மேல்
கிளர்ச்சி கொண்டு நனையுதாம்!
*
மழையில் நனையாதிரு - அழகே
முகில்கள் ஜொள்ளூற்றிடும்
மழையில் நனையாதிரு - அழகே
வான வில்தோற்றிடும்
நீருன் மேலேறினால் - அழகே
நெருப்புத் தூளாகிடும்!
காரில் நனையாதிரு - அழகே
காய்ச்சல் பூநீட்டிடும்!
துளிகள் உடல்தீண்டினால் - அழகே
சொர்க்கம் எனத்துள்ளிடும்
களியில் உயிர்நீத்திடும் - அழகே
கண்கள் சிவப்பாகிடும்!
உடைகள் ஈரமானால் - அழகே
உலர்த்தத் தென்றல்வரும்
குடைகள் நீதாங்கிடு - அழகே
கொண்டல் இடிகொண்டிடும்!
மின்னல் இடைகாணுமேல் - அழகே
மிரண்டு கண்ணீர்விடும்
பின்னல் நிறம்காண்கையில் - மேகம்
பிழிந்து வெளுப்பாகிடும்
எனக்குக் கவலையெல்லாம் - இயற்கை
என்ன படுமென்பதே!
உனக்குச் சந்தோஷமா? - போபோ
ஊரில் மழையாடிடு
வெட்கம் கொஞ்சம்படு - அதிலே
வெய்யில் தலைகாட்டிடும்
புட்கள் சிறகைப்பெறும் - மீண்டும்
புயலின் வலிவந்திடும்
மெல்ல கொஞ்சம்சிரி - வானம்
மேலே சிவப்பாகுமே
இல்லை ஒருமாற்றமும் - என்றால்
இன்னும் சிரியன்னமே!
நீயும் மழையாதலால் - போட்டி
நீளக் கூடாதடி
தீயின் விழிகண்டுதான் - மேகம்
தீயக் கூடாதடி
மழையில் நனையாதிரு - அழகே
மழையின் உயிரைவிடு!
இழையும் கருங்கூந்தலில் - வழியும்
ஈரம் துணியால்தடு!!
-விவேக்பாரதி
15.04.2018
Comments
Post a Comment