எழுத வைக்கிறாள்


எழுத வைக்கிறாள்! - தேவி
   எழுத வைக்கிறாள்!
எழுக வென்று இறைவி என்னை
   எழுத வைக்கிறாள்!
பழுத கற்றியே - எனைப்
   படர வைக்கிறாள்!
புழுவெ னக்குள் புலியின் வீரம்
   பூட்டி வைக்கிறாள்! 

வண்ண மாக்குவாள் - மன
   வன்மை கூட்டுவாள்!
எண்ணத் தேரி லேறி நின்று
   என்னை ஆட்டுவாள்!
கண்ணில் காண்கிற - எழில்
   காட்சி யாவையும்,
பண்ணி லேற்ற சக்தி தந்து
   பார்த்து மகிழுவாள்!

பூவின் வாசனை - மதி
   புரியும் யோசனை
யாவு மாகி உள்ளி ருந்து
   யாண்டு மாள்கிறாள்!
ஏவு மவளது - பணி
   ஏற்கு மடிமையை
மேவி வந்து பலவும் சேர
   மேன்மை தருகிறாள்!!

-விவேக்பாரதி 
30.07.2016

Comments

Popular Posts