மலரும் தர்மம்

வாழ்க்கை நமக்காய் மாறும் - அந்த
    வானும் கைகளில் சேரும்
தாழ்வும் உயர்வைச் சேர்க்கும் - பின்
    தாய்நிலம் உன்னைப் பார்க்கும்!

தூங்கத் தேவை இருட்டு - ஒளி
    தோன்றத் தேவை விழிப்பு
ஏங்கிக் கிடப்பது தாழ்வு - தலை
    ஏற்றி நிமிர்வதே வாழ்வு!

வருவார் போவார் சிலபேர் - நம்
    வரமாய் வருவார் சிலபேர்
தருவார் பெறுவார் சிலபேர் - நாம்
    தருவோம் பெறுவோம் உறவே!

எதுவும் நடக்கும் நாளை - அது
    எல்லாம் வெற்றி வேளை
கதவைத் திறந்தால் காற்று - நம்
    கவலை மறந்தால் வாழ்வு!

வாழ்க்கை ஓடை ஓடும் - நீர்
    வாடித் தேங்குதல் பாவம்!
தாழ்க்கை ஓர்நாள் உயரும் - நம்
    தர்மம் அன்று மலரும்!!

-விவேக்பாரதி
16.04.2018

Comments

Popular Posts