பராசக்திக் கும்மி

அண்டம னைத்திலும் மேவிநின் றாளுயிர்
    அத்தனைக் குள்ளுமு யர்ந்திருந் தாள்!
பெண்மைப ராசக்தி தம்மிரு தாளினைப்
    பீடுடன் போற்றிப்ப ணிந்திடு வாம்!

ஓடும ணுக்களில் வேகம வள்வந்து
    ஒட்டுமி சைகளின் நாதம வள்
பாடும ருங்கவிப் பாடல வள்மனம்
    பாரிலி யற்றிடுந் தேடல வள்!

வேதவி ளக்கத்தின் மூலம வள்நமை
    வெல்லப்ப ணித்திடுஞ் சீலம வள்
மாதுப ராசக்தி வாழிய வென்றவள்
    மாமலர் பாதம்வ ணங்கிடு வாம்!

உள்ளிலி ருக்கின்ற ஓர்வெளி யாமவள்
    உள்ளத்தெ ழுந்திடு மார்கலி யாம்!
தெள்ளத்தெ ளிந்ததை ஓதிடு வாளுயிர்
    தேய்க்கும ரக்கனை மோதிடு வாள்!

வேப்பிலைத் தேரில மர்ந்திருப் பாள்மன
    வேட்கைய ருந்திம கிழ்ந்திருப் பாள்!
காப்புக ளாகவி ளங்குப ராசக்தி
    கால்களை வாழ்த்தியி றைஞ்சிடு வாம்!!

-விவேக்பாரதி
30.03.2018

Comments

Popular Posts