சுப்புரத்தினம்

பாக்க ளுக்குள் வீச்சினைப்
    பார்த்து வைத்த நாயகன்!
தீக்க விஞன் தாசனாம்
    தீமை தன்னைச் சாடுவான்!
கூக்கு ரல்கொ டுத்திடும்
    கொள்கை மாந்தர் நெஞ்சிலே
தேக்கின் வீரம் தீட்டுவான் '
    தேச சுப்பு ரத்தினம்!


கடவு ளையெ திர்த்தவன்!
    கவிதை யைவ ளர்த்தவன்!
படப டென்று பேசுவான்!
    பட்ட வற்றை எழுதுவான்!
சிடுசி டுத்த இட்லரும்
    சிரிப்புச் சார்லி சாப்ளினும்
உடுத்திக் கொண்ட மீசையின்
    உயரம் சுப்பு ரத்தினம்!

இருண்ட வீடு காட்டினான்!
    இயக்கக் கொள்கை நாட்டினான்!
பெருகும் வீரக் கத்தியைப்
    பெண்ணி டத்தில் நல்கினான்!
அருமைக் காதல் தத்துவம்
    அழகி யற்கைச் சித்திரம்
பருக வைத்த தாயவன்
    பாட்டுச் சுப்பு ரத்தினம்!

புதுவை கண்ட குயிலிவன்
    புரட்சி சொன்ன கவியிவன்
மதுவை யொத்த கவிதையால்
    மண்ணி லத்தில் வாழ்பவன்!
அதிவி ரைவில் பாடுவான்
    அரச வைக்க விஞனாம்
மதிகொ டுத்த புலவனாம்
    மன்னன் சுப்பு ரத்தினம்!
-
 விவேக்பாரதி
29.04.2018

Comments

Popular Posts