தந்தைபால் மும்மணிமாலை

காப்பு:

வெண்பா

அப்பா வெனவந்த ஆண்டவரை எப்போதும்
ஒப்பா ரிலாத ஒருவரை - முப்பாவில்
போற்றத் துணிகிறேன் பொன்னுலகத் தந்தையான
ஏற்றச் சிவன்காப் பெனக்கு!

நூல்:

வெண்பா

காப்பாக வீட்டைக் கரையேற்றும் தந்தையாலே
தோப்பாய்க் குடும்பம் துலங்கிநிற்கும் - மூப்போடு
நின்றாலும் இல்தாங்கும் நெஞ்சுடைய தந்தையரை
என்றும் தொழுவோம் எழுந்து! (1)

கட்டளைக் கலித்துறை

எழுகிற போதே எதைச்செய வென்றே எழும்கரங்கள்!
விழுகிற போதிலும் வீட்டினைத் தாங்கி விழுமுடலம்!
அழுகிற சேதி அறியா துழைக்கும் அதிசயமாம்!
தொழுகிற தெய்வமும் தோன்றிடும் தந்தையின் தோற்றத்திலே! (2)

அகவல்

தோற்றத் தெளிமைத் தோன்றல் தந்தை!
ஏற்றம் வழங்கிடும் ஏணியு மாவார்!
அன்னை தருவ தன்பை
தன்மை, அறிவு தந்தையின் பரிசே! (3)

வெண்பா

பரிசெனத் தந்தை பகிருவ தெல்லாம்
உரிமையின் பக்குவம், ஊக்கம், - கரமெனத்
தாங்கிடும் தூணாகும் தந்தை சினமெலாம்
தீங்கிலை நம்குற்றத் தீர்ப்பு! (4)

கட்டளைக் கலித்துறை

ஈர்த்திட ஆடை அணிவது மில்லை, இளமையெலாம்
வேர்த்திட வோடும் வெறுமுழைப் பாளி, வெளியுலகில்
வார்த்தைகள் வாங்கி வழுக்கிய போதும் வசந்தமதைக்
காத்துடன் வீட்டில் கடமையிற் சேர்ப்பார் கவினுறவே! (5)

அகவல்

உறவுக ளெல்லாம் உணர்ச்சிக் கின்பம்!
அறிவுக் கின்பம் அப்பா தானே
பட்ட அனுபவப் பாடம்
கிட்டநின் றருள்வார் கேடுகள் அறவே! (6)

வெண்பா

வேதனை வந்து வெருட்டிடும் நேரமும்
போதனை தருவார் பொலிவுடன்! - சாதனை
நாம்காண மெச்சி நமைத்தூக்கித் துள்ளுவ(து)
ஆம்தந்தை காட்டிடும் அன்பு! (7)

கட்டளைக் கலித்துறை

அன்பு நிலைக்க அறிவுரை தந்தும், அடியெடுப்பில்
துன்பம் நிகழ்ந்தால் துடைத்திட வந்தும் துணையெனவே
முன்புறம் நின்றும் முனைப்புடன் காத்தும் முறுவலிப்பார்
தன்புறம் தீய தளிர்புறம் காத்திடும் தந்தையரே! (8)

அகவல்

தந்தை மகவைத் தாங்குவ துண்டு,
தந்தையின் தாங்கல் சிந்தையி லாகும்!
திங்கள் பத்தைத் தாண்டி
எங்கும் சுமப்பார் எழுப்பிடு மாறே! (9)

வெண்பா

மாறும் வயது மனத்தினுள் தந்தையைச்
சீறும் புலியெனவும் சித்தரிக்கும் - கூறுவேன்
தன்னிறகு நொந்தாலும் தன்கூட்டைத் தாங்குகிற
மென்மனதே தந்தை மனம்! (10)

கட்டளைக் கலித்துறை

மனத்தினில் வைத்து மறைத்துச் சிரித்திடும் மர்மவுளம்!
கனவினில் கூடக் குடும்பம் பேணிடும் காவலுளம்!
நனவினில் இன்பம் நிலைக்க விரும்பிடும் நல்லவுளம்!
சினத்தினை அன்பைச் சமமெனக் காட்டிடும் தந்தையதே! (11)

அகவல்

தேடி யிரையைத் தெளிவாய்ப் பிடித்துக்
கூடிப் பருகும் குருவியும் கூடத்
தந்தை அன்பைத் தலையாய்
வந்தனம் செய்து வாழ்த்திடுந் தானே! (12)

வெண்பா

தான்விரும்பும் செய்கையெலாம் தன்குடும்பம் வந்தபினே
வீண்விருப்பம் என்றெண்ணி விட்டிடுவர் - மாண்புடன்
வீட்டார் விருப்பை விழைந்து விரும்பிடுவர்
கூட்டாக வாழ்தல் குறித்து! (13)

கட்டளைக் கலித்துறை

குறிப்பால் உணர்த்திக் குடும்பத் தறிவின் குணமுயர்த்தி,
வெறுப்பா லதட்டி விரைந்து சினந்து வெடிவெடித்துப்
பொறுப்பாய்க் குளிர்ந்து பொறையுடன் புத்தி புகட்டுகிற
சிறப்பாம் குருமொழி தந்தை மொழியெனும் சீர்மொழியே! (14)

அகவல்

மொழிகள் குறைவாய் மொழிந்தால் கூட
விழைவால் உயர்வே விரும்பிடும் தந்தை,
புரியா திருக்கும் புதிர்தான்!
அரிய உறவாம் ஆண்டவன் உருவே! (15)

வெண்பா

உருவ மளிப்பார்! உயரம் அளிப்பார்!
திருவு மளிப்பார்! திறமைப் - பொருளும்
அளிப்பாரே தந்தை! அறிவும் குணமும்
அளிப்பாரே தந்தை அகத்து! (16)

கட்டளைக் கலித்துறை

அகத்தில் இருக்கும் அனுபவம் தந்தைக் கழகுமற்றும்
முகத்தி லிருக்கும் முறுவலும் மீசையும் முந்திவந்து
நகத்தில் இருக்கும் வெடிப்பும் உழைத்தே நலனிழந்த
சிகையி லிருக்கும் வழுக்கையும் மாறாச் சிரிப்பதுவே! (17)

அகவல்

சிரித்துப் பேசும் தந்தையர் எல்லாம்
அரிதாய் நமக்கு மமைந்த நண்பர்!
தந்தைக்கண் சொல்லத் தயங்கும்
சிந்தனை எல்லாம் தவறுக ளாமே! (18)

வெண்பா

தவறுகள் செய்திடில் தண்டிக்கும் தந்தை,
கவனமாய்க் காக்கும் கடவுள் - தவறைத்
துறக்கக் கொடுப்பதே தண்டனை! குற்றம்
மறக்கக் கொடுக்கும் மருந்து! (19)

கட்டளைக் கலித்துறை

மருந்தெனக் கேட்டால் மகத்துவத் தந்தை மனமொழியே!
விருந்தெனக் கேட்டால் வியத்தகு தந்தை விதித்ததுவே!
மரபணு வெல்லாம் மதிப்புடை தந்தை மலர்த்தியதே
சிரத்தினிற் கொள்வோம் சிறப்பெனத் தந்தையின் சீரடியே! (20)

(விருந்து - புதுமை)

அகவல்

அடியில் வேரே ஆலினைத் தாங்கும்
வடிவுடை தந்தை! வளர்வதற் காக
மண்ணுளே புதையும் போதும்
உண்ணச் சத்துகள் ஊட்டுவ தவரே! (21)

வெண்பா

ஊட்டுவ தன்னைதொழில் உற்ற வழிதன்னைக்
காட்டுவது தந்தையின் கண்ணோட்டம் - ஈட்டுவது
செல்வன் கடமை செழுங்குடும்பம் தந்தையரால்
செல்லும் புகழில் செழித்து! (22)

கட்டளைக் கலித்துறை

செழிப்பில் இருப்பினும் சேமித் திடுதல், செலவழிந்தால்,
உழைப்பி லுடனே உருவாக் கிடுதல், உலகமெலாம்
தழைக்கப் பணிகள் தரமாய்ப் புரிந்திடல் தந்தைதொழில்!
பழுத்த மரமாய்ப் பலவடு தாங்கும் பதத்தினரே! (23)

அகவல்

பதமே தரையில் பதியா வண்ணம்
நிதமும் மார்பிலும் நிமிர்ந்த தோளிலும்
தாங்கும் பாசத் தந்தை
தூங்கும் பொழுதும் துணையிருப் பாரே! (24)

வெண்பா

துணையெனத் தந்தையர் தோன்றுவ ரென்றால்
கணையையும் சாடிக் கடப்போம் - இணைந்துடன்
தோள்தரும் தந்தையர் தோழரென் றாகுவர்
வாள்தரும் வீர வளம்! (25)

கட்டளைக் கலித்துறை

வளமாய்க் குடும்பம் வளர்த்திட எண்ணிடும் வாழ்வுடையார்
களமா யமைந்த கடுமுழைப் பாலே கடமைசெய்வார்
உளமோ குடும்ப உயர்வினில் மட்டும் உயிர்த்திருக்கும்
அளவே யிலையே அவர்தம் புகழை அளப்பதற்கே! (26)

அகவல்

அளந்து வாழும் அப்பா மனத்தைப்
பிளந்து பார்த்தால் பிளவுக் குள்ளும்
அனுமன் மனம்போல் அங்கே
இனித்த குடும்பம் இருக்கும் வரைந்தே! (27)

வெண்பா

தேருலா வந்திடும் தெய்வம்! மனத்தினில்
சீருலாச் செய்பவர் தந்தையே - ஊரெலாம்
தந்தையெனும் பேர்சொல்லத் தானாய் மதிக்குமே
விந்தையிலை பந்த வியப்பு! (28)

கட்டளைக் கலித்துறை

வியப்புடன் தந்தை விரிக்கும் செயலை விதத்திடுவோம்
நயத்துடன் வாழ்வினில் நாளு மவர்வழி நாம்நடப்போம்
சுயநல மில்லாச் சுகநலம் தந்தையர் செய்நலமே
செயத்துடன் சுற்றம் செழித்திடச் செய்வோம் செயல்களையே! (29)

அகவல்

செயலென் றெதையும் செய்யும் முன்னம்
நயமாய்த் தந்தை நல்கிடும் ஞானம்
பெற்றுச் செய்தால் பெருமை
உற்ற தந்தையர் உயிர்களின் காப்பே! (30)

-நிறைந்தது-

-விவேக்பாரதி
14.05.2018

Comments

Popular Posts