தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு


காக்கைக் குருவிகளா? - அவரென்ன
    காளான் புல்லினமா?
காக்கும் பொறுப்புடையார் - கண்டபடி
    காயச் சுடுவதுவோ?


அவரும் உயிரலவோ? - அம்மம்மா
    ஆவி துடிக்கிறதே
தவற்றை எவரிழைத்தார்? - யோசிக்குந்
    தன்மை மறந்தனரோ? 

கொடுங்கோல் ஆட்சியதோ? - முன்னமோர்
    கொற்றவன் கோவலனைச்
சடுதியிற் கொன்றவுடன் - தண்டனை
  தானும் அடைந்தனனே!

அந்நெறி யோர்கிலமோ? - தமிழரின்
    அறிவு பறிபோச்சோ?
மெய்ந்நெறிக் காலவர்கள் - பன்னிய
    மேன்மையி லாச்செயலால்,

செத்தது மானுடந்தான் - புழுதியில்
    சேர்ந்தது நம்பிக்கைத்தேன்!
பொத்து வரும்புரட்சி - ஐயகோ
   போனது நம்வளர்ச்சி!!

-விவேக்பாரதி
22.05.2018

Comments

Popular Posts