முடியாக் கனவு

விடியும் வரையில் தினமுமுன்
   விலாசம் தேடி வருகின்றேன்
படிகள் கோடி இருந்தாலும்
   பாதை மாறா துயர்கின்றேன்
அடிகள் களிகள் அச்சங்கள்
   ஆளும் போதும் தொடர்கின்றேன்
முடியாக் கனவே நீமட்டும்
   முகத்தை ஏனோ திருப்புகிறாய்!

ஆரம் பத்தில் சிலபோது
   ஆனந் தத்தில் உருவாவாய்
பேரின் பத்தை நடுவாக்கிப்
   பேயைப் போன்றும் நீவருவாய்
கார ணங்கள் தெரியாது
   காட்சித் தன்மை தெரியாது
யாருக் காயோ நீவருவாய்
   யாரோ எல்லாம் நீகொணர்வாய்!

வசந்தம் உன்றன் விலாசமா?
   வண்ணம் உன்றன் சுபாவமா?
நிசத்தைப் போலப் பிரதாபமா?
   நினக்கும் விடியல் பிரகாசமா?
அசதித் தூக்கம் உன்வாசமா?
   அற்பம் அண்டம் உன்வேஷமா?
விசையா திசையா எதுமுடிவு?
   விடிந்தும் முடியா என்கனவே!

காதல் காட்சி படைக்கின்றாய்
   காமக் கலவை இழைக்கின்றாய்
போதப் பாதை கொடுக்கின்றாய்
   புதுமை கோடி எடுக்கின்றாய்
மீத மிருக்கும் முடிவென்ன
   மிச்சக் கனவின் கதையென்ன
சேதி யுரைக்கக் கேட்கின்றேன்
   சீக்கி ரம்சொல் என்கனவே!

உனையே நினைவாய்க் கொண்டிட்டால்
   உறக்கம் என்றன் உலகாகும்
உனையோர் கனவே எனவைத்தால்
   உலகம் எனக்கும் உறவாகும்
நினைவில் உன்னைச் சுமந்தபடி
   நீளம் கடக்க முயலுகிறேன்
கனவே இரவில் மறுபடியும்
   களவில் உன்னோ டெழுகின்றேன்!!

-விவேக்பாரதி
21.06.2018

Comments

பிரபலமான பதிவுகள்