கருமாரி கிரகமாலை

-காப்பு-

நவக்கிரக நாயகியே நாடியுன் தாளில் 
அவம்நீங்க வேண்டி அமர்ந்து – கவிசொல்வேன்!
மாலை முடிந்திடவும் மாற்றம் நிகழ்ந்திடவும்
காலங் கொடுத்தருள்வாய் காப்பு !

-நூல்-

காரிய மாற்றிக் கடமைசெய் வோரின் கருத்திடையில்,
சீரிய நோக்கிற் சிறப்புறச் செல்பவர் சிந்தைதனில்,
பேருரு வாகும் பெருங்கரு மாரி பெயருரைக்கச்
சூரியன் காத்துச் சுகத்தினை நல்கிச் சுடருகவே! (1)

சுடர்விடு மட்டிகை, சுட்டிகள், ஆரமும் சூடியிங்கே
இடமெனும் பாகம் இருந்தருள் வீசும் இறையவளைக்
கடமை புரியும் கருமா ரியவள் கனிப்பெயரைச்
சடுதியிற் சொல்லிடச் சந்திரன் இன்னொளி சாற்றுகவே ! (2)

சாற்றும் அவள்பெயர் தந்திடும் சக்திகள் சங்கடத்தை
மாற்றி உயர்க்கதி மண்ணில் நிறுத்திடும்! மாண்புடைய
காற்றை உணர்ந்து கருமா ரியின்பேர் கருதுகின்ற
ஆற்றல் அணிய,அங் காரகன் நன்மை அளித்திடவே! (3)

அளித்திடும் பக்தியில் ஆனந்தம் மாகி அணைத்திடுவாள்!
ஒளிர்த்திடும் கல்வியில் உண்மையில் நிற்பாள், உலகமெலாம் 
களித்திடும் தேவி கருமா ரிபெயர் கருதிநிற்கத் 
துளிர்த்திடும் ஞானத் துணையைப் புதன்தரச் சூலுரைத்தே! (4)

தேவர் துயர்மலை தேய்ந்திடக் கந்தன் திறனுயரக் 
காவலர் கொள்ளும் கனல்வடி வேலினைக் கைக்கொடுத்தாள் 
நாவலர் பாடிடும் நற்றமிழ் வாழ்கரு மாரியுன்பேர் 
கூவிட வந்து குருவறி வூட்டுக குணமுடனே! (5)

குணமும் திறமும் குறையில் மதியும் குவித்திடுவாள்!
மணமும் தவமும் மடமன மாளும் வழிவகுப்பாள்! 
கணக்கை அறியும் கருமா ரிபெயர் கவித்தவுடன்
பணமும் உயர்வும் படைசுக் கிரன்அருள் பாய்ச்சுகவே! (6)

பாய்ந்தெழுஞ் சத்தம் பகலிர வெல்லாம் படபடக்கக்
காய்ந்தெழுந் தந்தக் கடுமகி ஷாசுரன் காலமறுத்
தோய்ந்தவள் பேரை ஒழுகித் துதிக்கு மொருவர்தமை
ஆய்ந்துபின் பற்றியிங் காள்க சனியெனு மாண்டவனே !(7)

ஆண்டவன் கொண்ட அரவைக் குடையா யமைத்திருப்பாள்!
மீண்டது கையின் விரல்மோ திரமாய் மிளிர்ந்திடுமே!
வேண்டு மனைத்தையும் வேகமெ னத்தரும் வெற்றியள்பேர்,
யாண்டுமு ரைக்க இராகுவும் நோக்குக யாக்கையையே! (8)

யாக்கை கடந்தவள் யாரும் வணங்கிட ஆதரிப்பாள்!
பூக்கள் மணந்தரும் புன்னகை ஏந்திப் பொலிந்திடுவாள்!
காக்கை நிறத்தள் கருமா ரியின்பேர் கதைசொலவே
கேட்கும் அனைத்தையும் கேதுவும் நல்குக கேண்மையிலே ! (9)

-நூற்பயன்-

கேண்மையு மாகிக் கெடுத்திடு மெண்ணங் கெடுத்தெனக்கும்
ஆண்மையை என்றும் அருள்க நவகிரக ஆண்டவர்தாம்!
பூண்பது சத்தியம்! புத்தியில் நிற்பது பூரணமே!
காண்பது சக்தியைக் காயம் அவள்செயும் காரியமே! (10)

-விவேக்பாரதி
12.07.2017

Comments