இதயச்சிறை

 
யாரிந்த தேவியை வரவழைத்தார்? என்றன்
    யௌவணம் திருடிட அனுமதித்தார்
போரென்று சொல்லாமல் தோற்கடித்தாள் ஒற்றை
    புன்னகை வாளினால் சாகடித்தாள்!


அணுசக்திப் பந்தினைக் கண்களென்றார், தீய்க்கும்
    அமிலத்தைப் பார்வையில் சிந்திநின்றாள்,
கனவுக்குள் பலகுண்டு பெய்துவிட்டாள், என்னைக்
    கற்காலம் பார்த்திடச் செய்துவிட்டாள்!

வெண்பஞ்சு தோலுக்குள் வேலம்புகள், வந்து
    வெட்டும் பதத்தினில் மூக்கின்நுனி,
பண்ணம்பு வீசிடும் பாவைக்குரல், என்று
    படைநூறு கொண்டவள் தெய்வத்துகள்!

அழகெலாம் தாக்கிடும் மதயானைகள், நிழல்
    ஆனந்த வல்லியின் பலசேனைகள்,
பழகிடப் போர்செய்யும் நூதனத்தாள், இந்தப்
    பாவை இயற்கையின் சீதனத்தாள்!

ஒருபக்கம் ரதியென்னும் தோற்றத்தினாள் மற்றும்
    ஒருபக்கம் சதிசெய்யும் கூற்றத்தினாள்
இருபக்கம் கூர்கொண்ட பேனாமுனை இவள்
    இதயச் சிறைக்கில்லை எங்குமிணை!!

-விவேக்பாரதி
09.06.2018

Comments

Popular Posts