அர்த்தநாரி
![]() | |
வல்லமை வலைதளத்தில் பார்க்க சொடுக்கவும் |
துள்ளிவரும் தென்றலுடன் தோன்றுகின்ற கயிலையெனும்
வெள்ளிப் பனிமலையில் மெல்லவந்த காலையது!
மூன்று விழிகளையும் மூடி அமர்ந்தபடி
ஆன்ற மௌனத்தில் ஆதிசிவன் வீற்றிருந்தான்!
பக்கத்தில் தாட்சா யாணிநின்று கைவிரல்கள்
தொக்கிப் பிசைந்தபடி தூயவனைப் பார்த்திருந்தாள்...
தியானம் கலைத்த தலைவனவன் தேவியங்கு
வியாபித்த கோல விசித்திரங்கள் தாங்கண்டு
"என்ன வேண்டும்? எதற்கிந்த சந்தேகம்?
சொன்னால் தெளியும் சொல்"லென்றான்! அம்மையுடன்
"விருத்திப் பணிதான் விஜயத்தோ டேநடக்கத்
திருத்திய ஓர்யாகம் தெற்கிலெம் தந்தை
தட்சன இயற்றுகிறார் தாயழைத்தாள் அவ்விடத்தில்
கிட்ட இருந்து கிடக்கு முதவிபல
நானங்கு செய்து நலம்கூட்ட வேண்டித்
தானுங்கள் அனுமதியை நாடி இருக்கின்றேன்!"
என்றாள் சிவனுடனே எழுந்தான் "பாரம்மா!
உன்றன் நினைப்பும் உயர்வுதான் என்றாலும்
என்னை அழைக்காமல் ஏளனமா யெண்ணியவன்
முன்னந்த வேள்வியினை மூட்டுகிறான் நீசென்றால்
சொந்த மகளென்று சொல்லா தெனைக்கவிழ்க்கும்
சிந்தையோ டுன்னைச் சினந்திடுவான் இன்னுமுனை
ஏசி உரைமொழிவான் ஏங்கி மனஞ்சுளிப்பாய்
ஆசை விளைக்குமிந்த ஆபத்து வேண்டா"மென்
றுரைத்தான் எனினும் உலகம்மை மனத்தில்
நிறைந்திருந்த ஆசை நிறுத்து மளவில்லை!
"எந்தை எனையென்றும் ஏளனமாய் எண்ணுகிலார்
பந்தம் உணர்ந்து பரிவோ டணைத்திடுவார்
என்மனம் அங்கே இருக்க நினைக்கிறது
சென்று வருகிறேன் சீக்கிரமே நான்வருவேன்"
என்றுபல கூறி எடுத்த அடியிரண்டில்
"சென்றால் திரும்பாதே சேராதே நான்சொல்லித்
தட்டுகின்றாய் அங்கே தரம்குறைந்த சொல்லிலடி
பட்டுத் திருந்தெ"ன்று பற்றிவரும் கோவத்தோ
டீசன் மொழிந்தான் ஈஸ்வரியும் முகம்திருப்பி
யாக சாலைக்குள் அடிவைத்தாள்! அங்கிருந்தோர்
வேகும் தணலில் வெறுஞ்சுள்ளி இட்டிருந்தார்...
(வேறு)
யாவரும் அங்கிருந்தார் - நல்ல
யாழிசை பாணர்கள் அங்கிருந்தார்
தேவரும் அங்கிருந்தார் - பெருந்
தேவியர் யாவரும் அங்கிருந்தார்
பூவையர் அங்கிருந்தார் - பெறும்
புண்ணிய வேத முனியிருந்தார்
காவலர் அங்கிருந்தார் - உடற்
கட்டுடை ஆண்களும் அங்கிருந்தார்!
பிரம்மன் அமர்ந்திருந்தான் - மறை
பிழையறச் சொல்லும் தவமுனிகள்
அருகில் அமர்ந்திருந்தார் - அந்த
அரியவன் திருவொடு நின்றிருந்தான்
பெருகும் நெருப்பினிலே - அக்னி
பேழை வயிற்றைத் திறந்திருந்தான்!
குருக்களும் அங்கிருந்தார் - ஒரு
குணமிலாத் தட்சனும் அங்கிருந்தான்!
பார்வதி தேவிவந்தாள் - அந்தப்
பண்பறி யாதவன் இல்லம்வந்தாள்!
யார்வர வேற்கவந்தாள்? - தனி
யாளென வேள்விச் சபைக்குவந்தாள்!
வார்சடை வேதிகளும் - புவி
வாழ்த்திடும் தேவரும் தெய்வங்களும்
சீர்கெட்ட தட்சனுந்தான் - அவள்
செய்கையைக் கண்டு திகைத்துநின்றார்!
"எங்ஙனம் வந்தாயடி? - விடை
ஏறு மொருத்தனைக் காதலினால்
அங்ஙனம் சேர்ந்தவளே - உனை
ஆரிங் கழைத்தனர்? எங்குவந்தாய்?
மங்கல வேள்வியிலே - ஏதும்
மாசியற் றாதொரு மூலைதனில்
தங்கி உணவுண்டுபோ" - என
தட்சன் எழுந்து சினந்துரைத்தான்!
மேலும் மொழிந்திடுவான் - "ஒரு
மேன்மையி லாதவன் காட்டுப்புலித்
தோலை உடுத்தியவன் - உடல்
தோறுமச் சாம்பலைப் பூசுபவன்
ஆல மருந்தியவன் - வெறும்
ஆவிக ளோடுகூத் தாடுபவன்
சீலமிலாச் சிவனை - யான்
சீர்பெரும் வேள்விக் கழைக்கவில்லை!
என்ன சினந்தானா? - உள
வாளியென் றுன்னை விடுத்தானா?
என்ன கருதிவந்தாய்? - இன்னும்
என்மக ளென்ற நினைப்புனக்கோ?
சென்று தொலைந்துவிடு - இல்லை
சேர்ந்தொரு மூலையில் நின்றுவிடு"
என்று நகைபுரிந்தான் - சினம்
ஏற்றிவிட்டான் உமை சீறிவிட்டாள்!
(வேறு)
பார்வதி யாளுஞ் சினந்தாள் - உரை
பேசிய தந்தையை எண்ணிக் கனன்றாள்
மார்பு துடிக்க இருந்தாள் - அவள்
மங்கையென் றானதால் கண்ணீர் சொரிந்தாள்!
நெஞ்சு திகைத்திட லாச்சு - அந்த
நெருப்பைக் காட்டிலும் சுட்டிடும் பேச்சு
கொஞ்சமும் எண்ணிட வில்லை - அவள்
கொள்கை மழுங்கிய தந்தையின் சொல்லை!
கண்களில் ஜ்வாலை பறக்க - சினம்
கால்களைத் தூக்கி விசும்பில் நடிக்கப்
பெண்ணவள் பேசிட வந்தாள் - ஒரு
பேரடி தன்னைத்தன் சொல்லிடை தந்தாள்!
"ஞானமி லாச்சிறு தட்சா! - ஒளி
ஞாயிறும் திங்களும் கண்ணெனக் கொண்ட
வானவர் கும்பிடும் தேவை - நீ
வாழ்த்திடா திங்கொரு யாகமும் வைத்தாய்!
அவரை வணங்குதல் விட்டு - நீ
ஆயிர மாயிரம் ஏச்சுகள் இட்டுச்
சிவனை இழிந்துரைக் கின்றாய் - அவர்
சீதனம் என்னையும் நீசினக் கின்றாய்!
உன்றன் அழிவிது கண்டாய் - இவ்
வுயிரற்ற வேள்வி அழிந்திடு" மென்றே
சொன்னவள் மேலே நடந்தாள் - தன்
சோகத்தை ஈசனின் முன்னே மொழிந்தாள்!
(வேறு)
"சொல்லிய சொல்லைத் தாண்டி
சோதனை இருக்கும் பக்கம்
வல்லியே சென்றாய்! பட்ட
வலியெலாம் உனதே! நீயென்
இல்லாளு மில்லை சொன்னேன்
இனிவர வேண்டா போபோ
சொல்லினை மதிக்கா துற்றால்
சோகமே வாய்க்கும்" என்றான்!
கணவனின் பேச்சைக் கேட்டுக்
கலங்கினள் தேவி! வாட்டம்
அணங்கவள் நெஞ்சை வாட்ட
அடுத்தினி மேலும் சொல்வாள்,
"மணமுடை மலரில் லாமல்
மாலையின் நாறும் நாறே!
துணையென நானில் லாநீர்
தோன்றுதல் கடினம்" என்றாள்
"சிவனிலை நானில் லாமல்
சிந்தனை செய்க" வென்றாள்!
"சிவமின்றி சக்தி இல்லை
ஜீவனும் இல்லை" என்றான்!
அவர்களுக் குள்ளே கர்வம்
அங்குகூத் தாடி நின்றான்
தவறுகள் ஏச்செல் லாமும்
சினமென மாறிற் றங்கே!
இருவரும் சினந்து கொண்டார்
இமயமே குலுங்கக் கண்டார்!
ஒருவரை ஒருவர் தாக்கி
ஆயுதம் விடுக்க லானார்...
பெருவரை தோளும்! மின்னல்
பேரிடி இடையும் ஆடப்
பொருதினார்! சிவனெ ழுந்து
பொற்புடை நடனஞ் செய்தான்!
தாண்டவம் ஆட லானான்
தரணியை ஆட்டி விட்டான்
ஆண்டவர் யாரும் அஞ்சி
அவ்விடம் சூழ்ந்து விட்டார்
மாண்டவர் கூட அஞ்ச
மண்ணிலே உயிர்கள் அஞ்ச
வேண்டுவோர் எல்லாம் அஞ்ச
விரிகதிர் திங்கள் அஞ்ச
(வேறு)
வளியஞ்ச ஒளியஞ்ச வானஞ்ச மீனஞ்ச
வாரிதியும் நிலமுமஞ்ச
வரையஞ்ச நதியஞ்ச முகிலஞ்ச மரமஞ்ச
வளமான மலர்களஞ்ச
துளியஞ்சத் துறும்பஞ்சச் செடியஞ்சக் கொடியஞ்சத்
தோன்றிடும் நிழலுமஞ்சத்
துயரஞ்ச மகிழ்வஞ்ச உயிரஞ்ச உணர்வஞ்சத்
துண்டாகும் துகள்களஞ்ச
கிளியஞ்ச மயிலஞ்சக் குயிலஞ்ச நரியஞ்சக்
கழுகுகள் தாமுமஞ்சக்
கின்னரமும் அஞ்சிடக் கீழுலகும் மேலுலகும்
கிடந்தஞ்சச் சிவனாடினான்!
நெளிந்தாடி வளைந்தாடி நெற்றிவிழி திறந்தாடி
நெருப்போடு சிவனாடினான்!
நெஞ்சோடு நின்றிட்ட பார்வதியின் மேல்கொண்ட
நேர்கோபத் தாலாடினான்!
சிவனாட்டம் பேயாட்டாம் பூதங்கள் சேர்ந்தாடும்
சினத்தாட்டம் தீயினாட்டம்
சிவப்பேறி நின்றிட்ட வானத்தின் கோலத்தில்
சீறிவரும் காற்றினாட்டம்!
தவநாட்டம் கொண்டவரும் கலைநாட்டம் கொண்டவரும்
தடுமாறும் ஊழியாட்டம்
தாயற்ற சிவனாட்டாம் அழிவுக்குக் களியாட்டம்
தரணிகளும் ஆடுமாட்டம்
அவனாட்டம் கண்டவர்கள் எப்புறமும் அசையாமல்
அவ்வாறே நின்றிருந்தார்!
ஆதிசிவ காமியவள் சோகத்தில் கோபத்தில்
ஆச்சர்ய மாகிநின்றாள்
கவிநாட்டும் பார்வதியைக் கண்ணுதலின் தீக்கொண்டு
கங்குவர பொசுக்கிவிட்டான்!
கரையற்ற கோபத்தின் உச்சத்தில் ஆதிசிவன்
கண்ணுதலில் சுட்டுவிட்டான்!
யாகத்தைப் பொடியாக்க வீரபத்தி ரன்தம்மை
எம்பிரான் உருவாக்கினான்!
யாகமது நாசமுற பத்திரனும் வில்விட்ட
அம்பாய்வி ரைந்துசென்றான்!
வேகத்தில் வந்தகணை வென்றதைத் தேவர்கள்
வேந்தனிடம் சொல்லிவைத்தார்
வெந்துபொடி நீறான அம்மைக்கும் உயிரூட்ட.
வேண்டியவர் கேட்டுவைத்தார்!
சோகத்தில் நின்றசிவன் சினம்தீர்ந்து மனம்பூத்துச்
சொன்னபடி கேட்டுவிட்டான்!
சொல்கொண்டும் அருளென்னும் சுடர்கொண்டும் உமையம்மை
ஜோதியுயிர் பெற்றுவிட்டாள்
தேகத்தில் அவளுக்கும் இடந்தந்த சிவனங்கு
தெய்வத்தின் தெய்வமானான்
தெளிவிலும் உறுதியின் களியிலும் சமமென்று
தானர்த்த நாரியானான்!!
-விவேக்பாரதி
07.03.2018
Comments
Post a Comment