பலாத்காரம்


நடிகையரை நடிகர்களைப் பார்த்து விட்டால்
    நாத்தொங்க வாலாட்டிப் பின்னா லோடி
அடிவருடி செல்ஃபிகளை எடுத்துத் தள்ளி
    அதுகொண்டு மார்தட்டும் கூட்ட மெல்லாம்
வெடிபோல வெடிக்கின்ற செயலைப் பார்த்து
    வியந்தபடி நிற்கின்றேன் பெண்கள் என்றால்
முடிபோடும் பொம்மைகள் என்றார் அந்நாள்
    முகைகூட பலியானாள் கயமைக் கிந்நாள்

பாடல்களில் திரைக்கதையில் நிகழ்ச்சி தம்மில்
    பாழ்காம எண்ணத்தைத் திணித்துத் தீர்க்கும்
ஊடகமாம் அரக்கர்களின் கூட்ட மின்று
    உருமுகின்ற நிலைகண்டு திகைக்கின் றேன்நான்
ஏடகத்தில் முன்னோர்கள் சொல்லி வைத்த
    எல்லாமே பொய்யென்று பொய்மை பேசும்
நாடகத்தே பெண்மகளை மலர்கள் தம்மை
    நசுக்கிடுதல் காணமட்டும் குதிக்கின் றார்கள்!

நம்பிக்கை பலாத்காரம் செய்யப் பட்டு 
   நாளாகிப் பொனதிந்த நிலமாம் தாயைத்
தம்பிக்கும் வைக்காமல் அண்ணன் மாரே
    தான்சுரண்டி பலாத்காரம் செய்து விட்டார்
கும்பிட்டுக் கும்பிட்டு மனிதர் மானம்
    குலைந்திடவே பலாத்காரம் செய்தார் பின்தான்
வம்பிற்குப் பெண்களிடம் செய்ய வந்தார்
    வாட்டமெனில் முன்னதற்கும் வாடல் வேண்டும்

சுயவொழுக்கம் எல்லாமே முன்னோர் வேதம்
    சுத்தமான சிந்தனைகள் முன்னோர் வாக்கு
பயமென்ற பெயரால்தான் அவையென் றேண்ணிப்
    பார்க்குமொரு தலைமுறையைக் கெடுத்து விட்டார்
பயத்தோடு சுயவொழுக்கம் நேரும் பின்னர்
    பக்குவமாய் அதுவழக்காய் மாறும் என்னும்
நயத்தினையே மறைத்துவிட்டார் நாளெல் லாமும்
    நம்பிக்கை இன்மையையே ஓது கின்றார்

சிந்திந்தால் வழிபிறக்கும் இளைஞர் ரேநீர்
    சிந்திக்கா தெதையுமினி நம்ப வேண்டா
நிந்தித்துப் பொய்மைகளைப் பின்னால் தள்ளி
    நிமிருங்கள் எப்போதும் யோசி யுங்கள்
பந்திக்குப் பிந்துவது தமிழர் தர்மம்
    படைவந்தால் யோசித்து முந்த வேண்டும்
சந்ததிகள் வாழ்வதற்கா யேனும் நீங்கள்
    தரமான சிந்தனைகள் விதைப்பீர் நெஞ்சில்

எப்போதும் யாரையுமே நம்பிக் கொண்டு
    எழுதாதீர் பேசாதீர் உங்க ளுக்குள்
தப்பாது வாழ்கின்ற சாட்சி யின்சொல்
    சத்தியத்தைப் போதிக்கும் அதனில் நிற்க!
குப்பைகளும் மலைபோல்தான் தோற்றம் கொள்ளும்
    குற்றங்கள் காரணத்தை அணைத்துக் கொள்ளும்
ஒப்பாது நீருங்கள் வழியில் செல்க
    ஒழுக்கந்தான் முதல்வாழ்க்கை அனைத்தும் பின்னே!

ஆண்கண்கள் எப்போதும் சபலக் கண்கள்
    ஆரிதனை மறுத்துரைப்பார்? நாம்தான் நம்மை
வீணெண்ணம் வாட்டாமல் ஒருநி னைப்பை
    வித்தகமாய் நெஞ்சத்தில் வளர்த்தல் வேண்டும்!
மாண்புடைய பெண்ணினத்தைப் பார்க்கும் போது
    மாதாவாய் உடன்பிறப்பாய்த் கடவு ளாகக்
காணுங்கள் அப்போதே காதல் தோன்றும்
    காமமிலாக் காதலதே சொர்க்கம் கொள்ளும்!

வேகத்தால் அழிவிற்கே அதிக வாய்ப்பு
    விவேகத்தை நாமேனும் மனத்தில் கொள்வோம்
தேகத்தால் இருபாலும் மாறும் ஆனால்
    தேயாத மனவலியால் சமமே காண்க
மோகத்தால் காமத்தை வளர்த்துக் கொண்டு
    மூர்க்கத்தில் செய்கின்ற பிழைகள் எல்லாம்
தேகத்தோ டேயடங்கும் பழிதான் மிஞ்சும்
    தெளிவாக சிந்தித்தால் புகழும் நாடே!!

-விவேக்பாரதி
18.07.2018

Popular Posts