நேற்றைய நெஞ்சிலிருந்து - சேவாலயா தரிசனம்
என் இல்லம் தேடி மகிழுந்தில் வந்தார் திரு.முரளி அவர்கள். என்னை அழைத்துக்கொண்டு திருநின்றவூருக்கு அருகில் இருக்கும் கசுவா(கசிவாய்) என்னும் கிராமத்தில் இருக்கும் தனது பள்ளிக்கு வந்தார். பொதுவாகவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்ற எனக்கு அந்தப் பெயர்பலகையே பிரம்மாண்டமாகப் பட்டது. "மஹாகவி பாரதியார் மேனிலைப் பள்ளி" இந்தப் பெயருக்காகவே அந்த மண்ணை ஒருமுறையேனும் நாம் தரிசிக்க வேண்டும். உள்ளே நுழைந்ததும் இளஞ்சிட்டுகள் போல மூன்று குழந்தைகள் "வணக்கம் ஐயா. சேவாலயா உங்களை வரவேற்கிறது" என்று வரவேற்று பன்னீர் தெளித்து, சந்தனம் வழங்கி, இனிப்பு கொடுத்து ஒரு புன்னகைக் கும்ப வரவேற்பை நிகழ்த்தினர். எத்தனை பூரண கும்ப வரவேற்பு வந்தாலும் அதன்முன் தோற்கும் என்று நான் உறுதியாகக் கூறுவேன். உள்ளே சேவாலயாவின் சேவைகள் அத்தனையையும் விளக்கி ஒரு காணொலிப் படம் காண்பித்தார்கள். அதில் ஒருவர் தான் சேவாலயாவில் படித்து அங்கேயே வேலை பார்ப்பதாகவும், அதனால் அந்தப் புனிதமாக கோவிலுக்குள் செருப்பணியாமல்தான் தான் நடப்பதாகவும் சொன்னது எனக்கு பெரும்வியப்பையும் மரியாதையையும் உண்டுபண்ணியது. அதன்பின் நானும் செருப்பில்லாமல் தான் அந்த வளாகத்தைச் சுற்றிப் பார்த்தேன். மாண்டிஸரி அமைப்பிலான பாடத்திட்டமும் விளையாட்டு முறையான படிப்பும் என்று மாணவர்களை நேரடியாக செயல்பட வைக்கும் கல்விமுறைகளைக் கண்டேன். சில வெளிநாட்டவர்கள் வந்து தன்னார்வர்த்துடன் அங்கே பணியாற்றுகிறார்கள் என்பதையும் பார்த்துத் தெரிந்துகொண்டேன். கவிதை மன்றம் மற்றும் தமிழ்மன்றம் தொடங்க விழா ஏற்பாடு செய்திருந்தார்கள் அதில் கலந்துகொண்டோம்.


உங்களால் முடிந்தது என்ன ?
பிறந்தாநாள், திருமணநாள் போன்ற சுப நிகழ்ச்சிகளை அந்தக் குழந்தைகளோடு கொண்டாடுங்கள். மழலைகளின் சிரிப்பு இறைவன் வசிக்கும் கோவில் அல்லவா!
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்.
-பாரதி-
சேவாலயா வாழ்க! அவர்கள் சேவை வாழ்க!
-விவேக்பாரதி
12.07.2018
Comments
Post a Comment